Ind Vs Pak WCL 2025 Called Off: பாகிஸ்தான் உடனான போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விலகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து:
சர்வதேச அணிகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப்லெஜண்ட்ஸ் போட்டியின், நடப்பாண்டு எடிஷன் இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இங்கிலாந்தில் நடைபெறும் போட்டியில், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் , தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (ஜுலை.20) நடைபெறவிருந்தது. ஆனால், இதில் பங்கேற்கபோவதில்லை என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். முன்னதாக, ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் மற்றும் யூசஃப் பதான் ஆகியோரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கபோவதில்லை என அடுத்தடுத்து அறிவித்தனர். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ரத்து செய்யப்படுவதாக, உலக சாம்பியன்ஷிப் ஆஃப்லெஜண்ட்ஸ் போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.
காரணம் என்ன?
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, எட்க்பஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், பஹால்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்துள்ளது. இத்தகைய சூழலில் அந்த நாட்டுடன் விளையாடுவது அவசியமா? என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டே இந்திய வீரர்கள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஸ்டூவர்ட் பின்ன்னி, வருன் ஆரோன் மற்றும் வினய் குமார் உள்ளிட்டோர் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கோரிய WCL நிர்வாகம்:
போட்டி ரத்து செய்யப்படுவதாக WCL நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நல்ல போட்டி மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவதற்காகவும், அண்மையில் இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகளை கண்டபிறகே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த முயற்சியில் நாங்கள் சிலரது உணர்வுகளை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால், ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே போட்டிக்கான ஏற்பாடு செய்தோம் என்பதை சமூகம் புரிந்துகொள்ளும் என நம்புகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அஃப்ரிடி ஆவேசம்:
இதனிடையே செய்தியாளர்களிடையே பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி, “பஹல்காமில் பயங்கரவாதிகள் ஒரு மணி நேரம் மக்களைக் கொன்று குவித்தனர், 8 லட்சம் இந்திய ராணுவ வீரர்களில் ஒருவர் கூட அங்கு வரவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு அவர்கள் பாகிஸ்தானைக் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியா பயங்கரவாதத்தைத் தானே செயல்படுத்துகிறது, அதன் சொந்த மக்களைக் கொல்கிறது. பின்னர் பாகிஸ்தான் மீது பழியைப் போடுகிறது” என குற்றம்சாட்டியுள்லார். தற்போது இதுவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.