IND Vs ENG Old Trafford Test: இங்கிலாந்தின் ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் கடைசியாக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமை, சச்சின் டெண்டுல்கரையே சேரும்.
இந்தியா - இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டி:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டிக்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், இந்த மைதானத்தில் கடந்த 35 ஆண்டுகளில் ஒரு இந்தியர் கூட சதமடிக்கவில்லை என்ற புள்ளி விவரங்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
17 வயசு பையனின் 35 வருட சாதனை
கடைசியாக இந்த மைதானத்தில் கடந்த 1990ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 119 ரன்களை சேர்த்து இறுவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 17 மட்டுமே ஆகும். அவரது தீவிர முயற்சியால் போட்டி சமனில் முடிந்தது. இந்த போட்டி முடிந்து 35 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, தற்போது வரை வேறு எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசவில்லை. ட்ராவிட், கங்குலி, விவிஎஸ் லட்சுமணன், சேவாக், கோலி, ரோகித், ரகானே மற்றும் புஜாரா என உலக தரம் வாய்ந்த பல பேட்ஸ்மன்கள் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தாலும் கூட, அந்த மைதானத்தில் சதம் அடிப்பது என்பது கனவாகனே நின்றுபோனது. இந்த மோசமான சாதனை வரும் 23ம் தேதி நடைபெற உள்ள போட்டியின் மூலம் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் சதம் விளாசிய இந்தியர்கள்:
- முஷ்டக் அலி - 112 ரன்கள், 1936
- விஜய் மெர்சண்ட் - 114 ரன்கள், 1936
- பொல்லி உம்ரிகர் - 118 ரன்கள், 1959
- அப்பாஸ் அலி பைக் - 112 ரன்கள், 1959
- சுனில் கவாஸ்கர் - 101 ரன்கள், 1974
- சந்தீப் படில் - 129* ரன்கள், 1982
- மொகம்மது அசாருதீன் - 179 ரன்கள், 1990
- சச்சின் டெண்டுல்கர் - 119* ரன்கள், 1990
8 முறை இந்திய வீரர்கள் சதம் விளாசி இருந்தாலும், அதில் ஒருமுறை கூட இந்திய அணி வெற்றிக் கனியை பறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கில், கே.எல். ராகுல் சாதிப்பார்களா?
இந்நிலையில் தான், ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் கடந்த 35 ஆண்டுகளில் எந்தவொரு இந்தியரும் சதம் அடிக்கவில்லை என்ற வறட்சி, 23ம் தேதி தொடங்கும் டெஸ்டுடன் முடிவடையுமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக கேப்டன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன கே.எல். ராகுல் ஆகியோர் இந்த தொடரில் நல்ல ஃபார்மில் உள்ளனர். அவர்கள் சதமடிக்க வாய்ப்புள்ளது என்றும் கருதப்படுகிறது. இதுபோக இந்த தொடரில் ஆரம்பத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்த, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும் ஃபார்முக்கு திரும்பினால் சதமடிக்க முடியும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.