இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டித் தொடர் நிறைவு பெற்ற பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது. இதற்கான இந்திய அணியை இன்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான அணியில் ரோகித்சர்மா, விராட்கோலி மற்றும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்கிறார். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐ,பி.எல். போட்டியில் தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணிக்காக கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது ஆட்டத்தால் பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சூழலில் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கே.எல்.ராகுல் தலைமையில் டி20 தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் துணை கேப்டன் ரிஷப்பண்ட், ருதுராஜ் கெய்க்வாட், இஷான்கிஷான், தீபக்ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக களமிறங்குகின்றனர். ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் அய்யர், அக்ஷர் படேல் ஆல் ரவுண்டர்களாக களமிறங்குகி்னறனர். ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் சுழலில் அசத்த உள்ளனர். மூத்த வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த போட்டி மட்டுமின்றி, இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்று ரத்தான 5வது டெஸ்ட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கேப்டன் விராட்கோலியுடன், இளம் வீரர்கள் சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட், கே.எஸ். பரத் இடம்பிடித்துள்ளனர். ஹனுமா விஹாரி, புஜாராவும் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளனர். ஆல் ரவுண்டர் ஜடேஜா, அஸ்வின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா இடம்பிடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்