IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்க உள்ளது.

IPL 2025: நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ஆட்டங்கள் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025 - மீண்டும் எப்போது தொடக்கம்?
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டி பாதியிலேயே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் எப்போது போட்டிகள் தொடங்கும் என எந்த உத்தரவாதமும் இல்லாததால், பல வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே தங்கள் ஊர்களுக்கு புறப்பட தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தான், இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், ஐபிஎல் நிர்வாகம் உடனடியாக அணி உரிமையாளர்களை தொடர்பு கொண்டதாகவும், அடுத்த வார இறுதிக்கு முன்பாகவே, மீண்டும் போட்டிகள் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றார்போல தயார் நிலையில் இருக்கும்படி, அணி நிர்வாகங்களுக்கு வலியுறுத்தல்கள் சென்றுள்ளதாம்.
வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பு:
போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு, விரைவில் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது. அதோடு, திருத்தப்பட்ட போட்டி அட்டவணையின்படி போட்டிகளை நடத்த அரசின் அனுமதியையும் பெற வேண்டியுள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற வீரர்கள் மற்றுக் பயிற்சியாளர்களை மீண்டும் வரவழைப்பது தொடர்பான, முயற்சிகளில் அணி நிர்வாகங்கள் ஈடுபட தொடங்கியுள்ளன. பிசிசிஐ-யைப் பொறுத்தவரை, போட்டிகளை மீண்டும் தொடங்கி விரைந்து நடப்பாண்டு ஐபிஎல் எடிஷனை முடிப்படையே விரும்புகிறது. காரணம், ஆசிய கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ள செப்டம்பரில் மீண்டும் போட்டிகளை நடத்துவது சிரமம். அதோடு, சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதும் சிரமமாக மாறிவிடும். எனவே முடிந்தவரையில் விரைவில் போட்டிகளை மீண்டும் தொடங்க பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது.
போட்டி அட்டவணையில் திருத்தம்?
பதான்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்ட, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் இன்னும் 13 லீக் போட்டிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதைதொடர்ந்து பிளே-ஆஃப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது, பாதுகாப்பு கருதி சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அதோடு, ஏற்கனவே திட்டமிட்டபடி மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற வாய்ப்பில்லை எனவும், போட்டிக்கான அட்டவணையில் சில திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களுக்கு சர்வதேச போட்டிகள் உள்ளதால், அதற்கேற்றார்போல அதிக அளவில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாம். முக்கிய காரணம், வரும் ஜுன் 11ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா இடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளே-ஆஃப் வாய்ப்புகள்:
தற்போதைய நிலவரப்படி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. அதேநேரம், பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்ட டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டி விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கப்படுமா? அல்லது முற்றிலுமாக முதலில் இருந்து விளையாடப்படுமா? என்ற கேள்விகளுக்கு பதில் ஏதும் இல்லை. இரு அணிகளும் பிளே-ஆஃப் செல்ல வாய்ப்புள்ளதால், ட்ரா செய்து தலா ஒரு புள்ளியை எடுத்துச் செல்ல விரும்பாது என்பது குறிப்பிடத்தக்கது.




















