MI Vs RR, IPL 2024: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? ராஜஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை..!
MI Vs RR, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
MI Vs RR, IPL 2024: மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 13 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
ராஜஸ்தான் - மும்பை பலப்பரீட்சை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாகடே மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வென்று முதலிடத்திற்குச் செல்ல முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், மும்பை அணியோ விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. எனவே, நடப்பாண்டில் உள்ளூர் மைதானத்தில் களமிறங்கும் முதல் போட்டியில் வென்று, புள்ளிக்கணக்கை தொடங்க மும்பை மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
பலம் மற்றும் பலவீனங்களை பொருத்தவரையில் ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் தரமான பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளன. ஆனால், அதை முழுமையாக பயன்படுத்தி ராஜஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மும்பை அணியோ முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும், இரண்டு போட்டிகளிலும் இலக்கை சேஸ் செய்ய முடியாமல் தான் தோல்வியுற்றுள்ளது. ரோகித் சர்மாவை தவிர்த்து பாண்ட்யாவை கேப்டனாக்கியதால், மும்பை அணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற அந்த அணி ஒரு குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டியது மிகுந்த அவசியமாகும்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 212 ரன்களையும், குறைந்தபட்சமாக 90 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 214 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
மும்பை வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என அனைவரும் அறிந்ததே. அந்த விதத்தில் இன்றைய போட்டியிலும் எந்த மாற்றமும் இருக்காது. இதுவரை இங்கு நடைபெற்று 109 ஐபிஎல் போட்டிகளில் 50 போட்டிகளில் முதலில் விளையாடிய அணிகளும், 59 போட்டிகளில் இரண்டாவதாக விளையாடிய அணிகளும் தான் வெற்றி பெற்றுள்ளன. எனவே இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே விரும்பும்.
உத்தேச அணி விவரங்கள்:
மும்பை: இஷான் கிஷன், ரோகித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், பியூஷ் சாவ்லா, ஜி கோயட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், சந்தீப் சர்மா