MI vs LSG, 1st Innings Highlights: புரட்டி எடுத்த ஸ்டோய்னிஷ்..க்ருணால் பொறுப்பான ஆட்டம்..மும்பைக்கு 178 ரன்கள் இலக்கு
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 62 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னணியில் இருந்த மற்ற அணிகள் கூட அடுத்தடுத்த தோல்விகளால் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டாஸ் வென்ற மும்பை:
லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறும் தொடரின் 63வது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன. மும்பை அணி நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் நீடிக்கிறது. லக்னோ அணியும் 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன், 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லு கட்டுகின்றன. இந்த சூழலில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆரம்பமே அதிர்ச்சி:
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி-காக் மற்றும் தீபக் ஹூடா களமிறங்கினார். வழக்கம்போல் ஏக்னா மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்க, தீபக் ஹூடா வெறும் 5 ரன்களில் நடையை கட்டினார். அவரை தொடர்ந்து வந்து இளம் வீரர் மன்கட் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 12 ரன்களை சேர்ப்பதற்குள் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பொறுப்பான ஆட்டம்:
சற்றே நிலைத்து நின்று ஆடிய டி-காக், 2 சிக்சர்கள் உட்பட 16 ரன்கள் சேர்த்து இருந்தபோது, பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் முறையில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் க்ருணால் மற்றும் ஸ்டோய்னிஷ் பொறுப்பாக விளையாடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர். இதனால், 34 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் மும்பை அணி திணறியது. இதனிடையே, 49 ரன்கள் சேர்த்து இருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, க்ருணால் பாண்ட்யா மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
ஸ்டோய்னிஷ் அதிரடி:
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஷ் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஜோர்டன் வீசிய ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்தார். இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்த அவர், 47 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.
மும்பை அணிக்கு இலக்கு:
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை மும்பை அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.