LSG Play Off : கடைசி பந்து வரை பயமுறுத்திய கொல்கத்தா..! 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி..! ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற லக்னோ..!
IPL LSG vs KKR : கொல்கத்தா அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
குயின்டின் டி காக், கே.எல்.ராகுல் அதிரடியால் லக்னோ நிர்ணயித்த 211 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் டக் அவுட்டாகினார். அடுத்து சில ஓவர்களிலே மற்றொரு தொடக்க வீரரும், டி காக்கிற்கு கேட்ச்சை விட்ட வீரருமான அபிஜீத் தோமர் 4 ரன்களில் அவுட்டாகினர். தொடக்க வீரர்கள் இருவரையும் மோஷின்கான் காலி செய்தார்.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த நிதிஷ்ராணா- ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் இறங்கினர். ஆவேஷ்கான் வீசிய 4வது ஓவரில் நிதிஷ்ராணா 5 பவுண்டரிகளை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக ஸ்ரேயாஸ் அய்யரும் அதிரடியில் இறங்கினார். இவர்களது பார்ட்னர்ஷிப் 20 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா 60 ரன்களை எட்டியது.
கொல்கத்தா அணிக்காக அதிரடி காட்டிய நிதிஷ் ராணா 22 பந்தில் 42 ரன்களில் அவுட்டானார். அவர் 9 பவுண்டரிகளை விளாசியிருந்தார். நிதிஷ் ராணா ஆட்டமிழந்த பிறகு கொல்கத்தாவின் ரன் வேகம் சற்று குறைந்தது. ஆவேஷ் கான் ஓவரில் பில்லிங்ஸ் சிக்ஸர், பவுண்டரி விளாசி மீண்டும் ஆட்டத்தை அதிரடியாக்கினார். 11வது ஓவரில் கொல்கத்தா 100 ரன்களை எட்டியது. இலக்கு பெரியதாக இருந்ததால் பில்லிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடினர். பில்லிங்ஸ் – ஸ்ரேயாஸ் ஜோடி 25 பந்தில் 50 ரன்களை விளாசினர்.
சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் 28 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். அரைசதம் அடித்த அடுத்த பந்திலே ஸ்ரேயாஸ் அய்யர் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்தபோது கொல்கத்தா வெற்றிக்கு 38 பந்தில் 80 ரன்கள் தேவைப்பட்டது. ரஸல் அதிரடியாக ஆட முயற்சித்தாலும் அவருக்கு கிளிக் ஆகாததால் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகரிக்கத் தொடங்கியது. கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டது.
அதிரடி காட்டிக்கொண்டிருந்த பில்லிங்ஸ் லக்னோ வீரர் பிஷ்னோய் சுழலில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 17வது ஓவரில் லக்னோ அணி 150 ரன்களை எட்டியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடைசி நம்பிக்கை ரஸல் சிக்ஸர் அடித்த பந்தை எல்லைக்கோட்டு அருகே ஹூடா அருமையாக கேட்ச் பிடித்தார். கடைசியில் ஜோடி சேர்ந்த சுனில் நரைனும், ரிங்குவும் அதிரடியாக ஆடினர்.
கடைசி கட்டத்தில் சுனில் நரைன் சிக்ஸராகவே விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக ரிங்குவும் சிக்ஸர் விளாசினார். இதனால், கடைசி 6 பந்தில் கொல்கத்தா வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டோய்னிஸ் வீசிய முதல் பந்தை ரிங்குசிங் பவுண்டரி விளாசினார். இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். கடைசி 3 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் 2 ரன்கள் ஓடினார். இதனால், 2 பந்தில் 3 ரன்கள் என்றதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு எகிறியது.
ஆனால், 5வது பந்தில் ரிங்கு சிங் அடித்த பந்தை எவின்லிவீஸ் நம்ப முடியாத கேட்ச் பிடித்து அசத்தினார். ரிங்குசில் 15 பந்தில் 40 ரன்கள் விளாசினார். இதனால், கடைசி 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் கடைசி பந்தில் போல்டானதால் லக்னோ 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் லக்னோ அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. ஆவேஷ்கான் 4 ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கினார். மோஷின்கான் 4 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்