KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட தயார் என கே.எல் ராகுல் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் சென்னை அணியில் விளையாட விரும்புவதாக கே.எல் ராகுல் மறைமுகமாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல் ராகுல் அந்த அணியால் மெகா ஏலத்திற்கு முன் தக்க வைக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ராகுலை லக்னோ அணி தக்க வைக்கவில்லை. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன்,மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி மற்றும் மோசின் கான் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். இதனால் அவர் பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம் பெற்றுள்ளார்.
மனம் திறந்த ராகுல்:
இந்த நிலையில் லக்னோ அணியில் தான் தக்க வைக்கப்படாதது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் ராகுல் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் லக்னோ அணியில் யாரை தக்க வைக்க வேண்டும் என அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்து விட்டனர். அதை பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பில்லை. நான் புதிய பயணத்தை தொடங்க விரும்புகிறேன். எனக்கு வெளியில் என்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். மேலும் எனக்கு சுதந்திரம் கிடைக்கும் இடத்தில் விளையாடுவது எனது விருப்பம் . ஐபிஎல் மாதிரி மிகுந்த நெருக்கடி நிறைந்த தொடர்களில் நாம் விளையாடும் அணியின் சூழல் சற்று நிலையானதாகவும் இலகுவாகவும் இருந்தால் நல்லது என்று தெரிவித்தார்.
சிஎஸ்கேவில் விளையாட விருப்பம்?
நீங்கள் குஜராத், சென்னை போன்ற அணிகளை எடுத்து கொண்டால் அவர்கள் தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, அவர்கள் எல்லாவற்றையும் ஒரே மன நிலையோடு பொறுமையாக கையாள்வார்கள். அந்த மாதிரியான சூழல் தான் வீரர்களை சிறப்பாக விளையாடுவதற்கு ஊன்று கோலாய் அமையும். நானும் இதே போன்ற ஒரு கட்டமைப்பை தான் லக்னோ அணியில் கொண்டு வர விரும்பினேன் என அந்த நேர்காணலில் கே.எல் ராகுல் தெரிவித்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட தயார் என கே.எல் ராகுல் மறைமுகமாக விருப்பம் தெரிவித்தாக நெட்டிசன்கள் விருப்பம் கூறி வருகின்றனர்.
பெங்களூரு நினைவுகள்:
மேலும் ஆர்சிபி அணிக்காக 2016ஆம் ஆண்டு விளையாடிய போது அந்த சீசனில் நாங்கள் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது, ஆனால் நூழிலையில் கோப்பையை தவறவிட்டோம். அந்த தோல்வி குறித்து நானும் விராட் கோலியும் பல முறை பேசி இருக்கிறோம், எங்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் நேரம் நின்று ஆடியிருந்தால் அந்த ஆண்டு பெங்களூரு அணி தான் கோப்பை அடித்து இருக்கும். ஆனால் அன்று எங்களுக்கு அது கை கூடவில்லை. அடுத்த சீசனில் பெங்களூரு அணி நன்றாக விளையாடி கோப்பையை அடிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். பெங்களூரு மக்கள் இன்னும் என்னை அவர்கள் பையனாக தான் பார்க்கிறார்கள், வாய்ப்பு கிடைத்தால் என் சொந்த மக்கள் முன்பு விளையாட விரும்புகிறேன், ஆனால் இது ஐபிஎல் மெகா ஏலம் என்ன வேண்டுமானலும் இதில் நடக்கலாம் என்று கே.எல் ராகுல் தெரிவித்தார்.