Jio Cinema: 'கிரிக்கெட் எங்க உயிருக்கும் மேல’ .. கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை வெளிக்காட்டிய ஜியோ சினிமா..!
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது மொத்தம் 3.2 கோடி பார்வையாளர்களை பெற்று ஜியோ சினிமா செயலி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது மொத்தம் 3.2 கோடி பார்வையாளர்களைப் பெற்று ஜியோ சினிமா புதிய சாதனைப் படைத்துள்ளது .
நேற்று முன் தினம் (29.05.23) சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில் ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்றது. கடந்த 28 ஆம் தேதி நிகழவிருந்த இந்த போட்டி மழைகாரணத்தினால் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் முதல் இன்னிங்ஸில் குஜராத் 214 ரன்கள் எடுத்தது. சென்னை அணி ஆட்டத்தைத் தொடங்கிய சில நேரத்தில் மழை ஆட்டத்தை இடைமறித்தது. போட்டி தொடருமா இல்லையா என்கிற குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருந்தார்கள். பின் மழை நின்ற பிறகு போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்றாக இது இருந்தது. சென்னை அணி ரசிகர்கள் கதறி அழுத காட்சிகள் அனைவரின் மனதையும் கலங்கடித்தது. தல தோனி எந்த வார்த்தையும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார். இது அவரது கடைசி போட்டியாக இருக்குமோ என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த வெற்றி அவருக்கு மட்டும் இல்லை அனைவருக்கும் முக்கியமானது. இரண்டு பந்துகளில் மொத்தம் 10 ரன்கள் தேவை. ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐ.பி. எல் இல் ஜடேஜா மிக சுமாரான ஃபார்மில் இருந்திருக்கிறார். மேலும் அவர் விளையாட வரும்போது எல்லாம் ரசிகர்கள் அவரை ஆட்டமிழக்கச் சொல்லும் வகையில் அவருக்கு அடுத்து வரும் தோனி பெயரை கத்தினார்கள். இது குறித்து ஜடேஜா வெளிப்படையாக சற்று நகைச்சுவையாகவேகூட கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கிடையில் தோனி மற்றும் ஜடேஜாவிற்கு இடையில் ஏதோ கருத்து வேறுபாடு நிகழ்ந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா மற்றும் அவரது மனைவி மறைமுகமாக வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பின.
இது எல்லாம் முடிந்து இறுதியாக இரண்டு பந்துகளில் பத்து ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழ்நிலையில் நிற்கிறார் ஜடேஜா. முதல் பந்து சிக்ஸ். தல தோனி தலையை நிமிர்த்தவில்லை. முற்றிலும் நம்பிக்கை இழந்த சென்னை ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுகிறார்கள். கடைசிப் பந்து வீசப்படுகிறது. ஃபோர். 5 ஆவது முறையாக கோப்பையை கைபற்றியது சென்னை . போட்டி முடிந்தபின் பல்வேறு மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசித்தார்கள்.
ஆனால் கதை இது இல்லை. இந்த ஒட்டுமொத்த அனுபவத்தை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கிய ஜியோ சினிமாவைப் பற்றியது. நேற்று முன் தினம் ஒரு நாளில் மட்டும் ஒரே சமயத்தில் மொத்தம் 3.2 கோடி ரசிகர்கள் ஜியோ சினிமாவில் இந்த ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார்கள். இதன் மூலம் ஜியோ புதிய சாதனையை படைத்துள்ளது.