"என்னால்தான் கோப்பை மிஸ் ஆனது… நெருப்பாக இருந்தார் விராட் கோலி"- 2016 ஆர்சிபி தோல்வி குறித்து வாட்சன்!
அந்த ஃபைனலில் ஆர்சிபி வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியம், அந்த அணிக்கு அது எப்பேர்ப்பட்ட வெற்றி என்பது எனக்கு தெரியும்.
ஐபிஎல்-இல் எத்தனையோ சாதனைகள் செய்திருந்தாலும், கோப்பை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது ஆர்சிபி-க்கு. ரோஹித் சர்மா 5 முறை, தோனி 4 முறை ஐபிஎல் கோப்பையை தங்கள் அணிகளுக்கு வென்று கொடுத்த நிலையில், சாம்பியன் வீரரான கோலி மட்டும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது அவரது ஐபிஎல் கெரியரில் கரும்புள்ளியாக இருந்து வருகிறது. இந்திய அணி கேப்டன்ஷிப்பை இழந்த அவர் ஆர்சிபி அணிக்கு கோப்பையை வெல்லாமலே கேப்டன்சி பதவியை இழந்தார். அணி வீரராக மட்டும் ஆடி வரும் கோலி, சுத்தமாக ஃபார்மில் இல்லாமல் தொடர்ச்சியாக சோதப்பியும் வருகிறார். பலர் இடைவேளை எடுத்துக்கொண்டு திரும்ப வரலாம் என்றெல்லாம் அட்வைஸ் செய்து வரும் நிலையில் வாட்சன் அவரது 2016 இன் பீக் ஃபார்ம் குறித்து பேசி இருக்கிறார்.
2016 ஐபிஎல்லில் கோலி செம ஃபார்மில் அபாரமாக விளையாடி 4 சதங்களுடன் 973 ரன்களை குவித்தார். அந்த சீசனில் கோலியின் அபாரமான பேட்டிங்கால் ஃபைனல் வரை சென்ற ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது.
சன்ரைசர்ஸுக்கு எதிரான ஃபைனலில் ஆர்சிபி தான் வெற்றி பெற்று கோப்பையை தூக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆர்சிபி அணி. அந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 208 ரன்கள் அடித்தது. அந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஆடிய ஷேன் வாட்சன் வீசிய கடைசி ஓவரில் பென் கட்டிங் காட்டடி அடித்து 24 ரன்களை குவித்தார். அதனால் தான் சன்ரைசர்ஸ் அணி 208 ரன்களை குவித்தது. 209 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 200 ரன்கள் அடித்து 8 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஷேன் வாட்சன் வீசிய கடைசி ஓவர் தான் ஆட்டத்தின் முடிவையே மாற்றியது.
அதன்பின்னர் 2018 ஐபிஎல் ஃபைனலில் அபாரமாக ஆடி சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த வாட்சன், இப்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்துவருகிறார். இந்நிலையில், ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு தன்னால் பறிபோனதை நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷேன் வாட்சன், "2016 ஐபிஎல்லில் நான் ஆர்சிபி அணியில் ஆடினேன். அந்த ஐபிஎல் ஃபைனல் தான் என்னை நொறுக்கிவிட்டது. அந்த ஃபைனலில் ஆர்சிபி வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியம், அந்த அணிக்கு அது எப்பேர்ப்பட்ட வெற்றி என்பது எனக்கு தெரியும். ஹோம் ஸ்டேடியம் ஆன பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அந்த போட்டி நடந்தது. அந்த சீசன் முழுக்க ஆர்சிபி சிறப்பாக விளையாடியது. விராட் கோலி அந்த சீசனில் செம ஃபார்மில் ஆடினார். மிகச்சிறந்த வீரரான கோலி ஐபிஎல் டைட்டிலை வெல்ல அருமையான வாய்ப்பிருந்த சீசன் அது. அந்த ஒரு ஓவர் என்னை நொறுக்கிவிட்டது. அது என்னை வெகுவாக பாதித்தது. அதே மாதிரி நடந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் 2018 ஐபிஎல் ஃபைனலில் ஆடினேன்", ஷேன் வாட்சன் தெரிவித்தார்.