(Source: ECI/ABP News/ABP Majha)
IPL2023 SRHvsDC Preview: வாழ்வா சாவா நிலையில் முட்டி மோதவுள்ள டெல்லி - ஹைதராபாத்.!
IPL SRHvsDC: புள்ளிப்பட்டியலில் இறுது இரண்டு இடங்களில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதவுள்ளன.
IPL SRHvsDC: வார இறுதியான இன்று ஐபிஎல் லீக் போட்டிகளில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முதல் போட்டியாக கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மற்றொரு போட்டியில் இந்த சீசனில் மிகவும் மோசமான நிலையில் இருக்கக்கூடிய அணிகளான சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன. இந்த தொகுப்பில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து பார்க்கலாம்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. இந்த இரு அணிகளின் நிலை மோசமாக இருக்கிறது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.
இதுவரை ஹைதராபாத் அணி
மார்க்கரம் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த தொடர் தொடங்கியது முதல் ஒரு அணியாக திறம்பட செயல்பட முடியாமல் உள்ளது. ஹைதராபத் அணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தடுமாற்றமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் காயத்தினால் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மேற்கொண்டு நீடிக்க வேண்டுமானால் இனிவரும் போட்டிகள் அனைத்திலும் ஹைதராபாத் அணி வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான வீரர்கள் அணியில் இருந்தாலும் ஹைதராபாத் அணியால் சிறப்பான மற்றும் சவாலான ஆட்டத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தமுடியவில்லை என்பது அந்த அணிக்கு மிகவும் வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது.
இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் போல் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ள அணியாக டெல்லி அணி உள்ளது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அனைத்து போட்டிகளிலும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அதேபோல் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக்கூடிய மற்றொரு வீரர் என்றால் அது அக்சர் பட்டேல் தான். பந்து வீச்சில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடும் அக்சர் அணிக்கு நம்பிக்கையாக உள்ளார். டெல்லி அணியைப்ன் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய பட்டாளமே உள்ளது எனும் அளவிற்கு அணியில் வீரர்கள் இருந்தாலும், களத்தில் அவையெல்லாம் தவிடுபொடியாகிவிடுகின்றன. சொந்த மண்ணில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணி வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும். இனி வரும் 7 போட்டிகளும் டெல்லி அணிக்கு வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளாகும்.