RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
குவாலிஃபயருக்கு செல்ல வேண்டிய நெருக்கடியான போட்டியில் லக்னோவை வீழ்த்தி ஆர்சிபி அணி குவாலிஃபயர் 1க்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி - லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி ரிஷப்பண்டின் அபார அரைசதம், மார்ஷின் அதிரடி அரைசதத்தின் உதவியால் ஆர்சிபி அணிக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
228 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் குவாலிஃபயர் சுற்றில் ஆட முடியும் என்ற நிலையில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி - பில் சால்ட் ஆட்டத்தை தொடங்கினர். இலக்கு பெரியது என்பதாலும், வெற்றி கட்டாயம் என்பதாலும் இருவரும் அடித்து ஆடினார்கள். இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். இதனால், ரன்ரேட் 10க்கும் மேலே சென்று கொண்டே இருந்தது.
கோலி சரவெடி:
அபாரமாக ஆடிக்கொண்டிருந்த பில் சால்ட் ஆகாஷ் ஓவரில் அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு இம்பேக்ட் வீரராக ரஜத் படிதார் களமிறங்கினார். படிதார் களமிறங்கிய உடன் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ஆனால், அந்த அதிரடி நீடிக்கவில்லை. அவர் 7 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த அதே ஓவரின் அடுத்த பந்திலே லிவிங்ஸ்டன் டக் அவுட்டானார். இதனால், 90 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலைக்கு ஆர்சிபி தள்ளப்பட்டது. அப்போது, கோலி - மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாகவே ஆடினர். குறிப்பாக, பவுண்டரிகளாகவே விளாசினர். அபாரமாக ஆடிய விராட் கோலி அரைசதம் விளாசினார்.
ஜிதேஷ் காட்டடி:
அரைசதம் கடந்த விராட் கோலி ஆவேஷ்கான் பந்தில் அவுட்டானார். அவர் 30 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர், மயங்க் அகர்வால் - கேப்டன் ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாகவே ஆடியது. ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். இதனால், கடைசி 30 பந்துகளில் ஆர்சிபி வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது.
ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் திக்வேஷ் ரதி ஓவரில் ஜிதேஷ் சர்மா அடித்த பந்தை பதோனி அபாரமாக கேட்ச் பிடித்தார். ஆனால், அந்த பந்து தரையில் பட்டது போல தெரிந்தது. இதையடுத்து, டிவி ரிவியூவில் பார்த்தபோது திக்வேஷ் ரதி வீசிய பந்து நோபால் என்று தெரியவந்தது. இதையடுத்து, கிடைத்த ப்ரி ஹிட் வாய்ப்பில் ஜிதேஷ் சர்மா சிக்ஸர் அடித்தார். 22 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தையும் கடந்தார்.
ரிஷப்பண்டின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்:
திக்வேஷ் ரதி தான் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஜிதேஷ் சர்மாவை மன்கட் செய்தார். ஆனால், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் அந்த அவுட் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதையடுத்து, மீண்டும் ஜிதேஷ் சர்மா ஆடினார். ரிஷப்பண்டை கட்டிப்பிடித்து தனது நன்றியையும் ஜிதேஷ் சர்மா தெரிவித்தார்.
இதனால், கடைசி 18 பந்துகளில் ஆர்சிபி வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. வில்லியம் ஓரோர்க்கி வீசிய 18வது ஓவரில் ஜிதேஷ் சர்மா அடுத்தடுத்து 2 பவுண்டரிகள், 2 சிக்ஸரை விளாசி ஆட்டத்தை முழுவதும் ஆர்பிசி வசம் கொண்டு வந்தார். இதனால், கடைசி 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
ஆர்சிபி அபார வெற்றி:
ஜிதேஷ் சர்மா பதோனி பந்தில் சிக்ஸர் விளாசி ஆர்சிபியை வெற்றி பெற வைத்தார். 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆர்சிபி 230 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. ஜிதேஷ் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் 33 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மயங்க் அகர்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
குவாலிஃபயர் 1ல் ஆர்சிபி:
ஐபிஎல் வரலாற்றிலே சேசிங் செய்யப்பட்ட 3வது மிகப்பெரிய இலக்கு இதுவே ஆகும். இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்து குவாலிஃபயர் 1ம் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளது. வில்லியம் ஓரோர்க்கி 4 ஓவர்களில் 74 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இறுதிப்போட்டிக்குச் செல்லும் குவாலிஃபயர் 1ம் போட்டியில் ஆர்சிபி அணி பஞ்சாப்புடன் மோதுகிறது. இதன்மூலம் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் - மும்பையுடன் மோதுகிறது.




















