IPL Points Table: மீண்டும் கொல்கத்தாவிடம் சரணடைந்த பெங்களூரால் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா அணி பெங்களூரு அணியை மீண்டும் வெற்றி கண்டது. இதனால் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
ஐபிஎல் சீசன்:
16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
நேற்றைய போட்டி:
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
புள்ளிப்பட்டியல்:
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
சென்னை | 7 | 5 | 2 | 10 |
குஜராத் | 7 | 5 | 2 | 10 |
ராஜஸ்தான் | 7 | 4 | 3 | 8 |
லக்னோ | 7 | 4 | 3 | 8 |
பெங்களூரு | 8 | 4 | 4 | 8 |
பஞ்சாப் | 7 | 4 | 3 | 8 |
கொல்கத்தா | 8 | 3 | 5 | 6 |
மும்பை | 7 | 3 | 4 | 6 |
ஐதராபாத் | 7 | 2 | 5 | 4 |
டெல்லி | 7 | 2 | 5 | 4 |
முதல் நான்கு இடங்களில் யார்?
சென்னை அணி நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. மும்பைக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் குஜராத் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவில் அணிகளுக்கு இடையே முதல் 4 இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ரன் ரேட் முக்கிய பங்காற்றி வருகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்குள் எந்த அணிகள் நுழையும் என்பதையும் இந்த முறை ரன் ரேட் தான் நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது.
மற்ற அணிகளின் நிலை:
கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்க, மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் 8வது இடத்தில் உள்ளது. ஐதாராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகள் உடன், புள்ளிப்பட்டியலில் முறையே 9 மற்றும் 10வது இடங்களில் நீடிக்கின்றன.
இன்றைய போட்டி:
ஜெய்ப்பூரில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. இதில் சென்னை அணி ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், இந்த போட்டியில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலேயே இருக்கும். ராஜஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். இன்று இரவு நடக்கும் போட்டி முதல் இடத்துக்கான போட்டியாகத் தான் உள்ளது.