IPL Final RCB vs PBKS: 18 ஆண்டுகள் தவம்! விராட் கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? ஐபிஎல் கோப்பை வரம் யாருக்கு?
ஐபிஎல் சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்க உள்ள நிலையில் விராட் கோலி மற்றும் ப்ரீத்தி ஜிந்தா இருவரில் கோப்பையை ஏந்தப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

18வது சீசனின் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி - பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே புதிய சாம்பியனுக்கான மோதல் நடைபெற உள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டி:
ஐபிஎல் வரலாற்றில் கோப்பையே வெல்லாத 3 அணிகள் பஞ்சாப், ஆர்சிபி மற்றும் டெல்லி ஆகிய அணிகள். இந்த 3 அணிகளையும் ஒவ்வொரு சீசனிலும் மற்ற அணியின் ரசிகர்கள் ஏளனமாக பார்ப்பதும், கேலி செய்வதும் தொடர் கதையாகவே இருந்தது. குறிப்பாக, விராட் கோலி ஆடும் ஆர்சிபி அணி எதிர்கொண்ட விமர்சனங்களும், கேலிகளும் சொல்லி மாளாது.
ஆனாலும் இந்த அணிகளுக்கான ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த தொடர் தொடங்கும் முன்பு இந்த அணிகள் கோப்பை வெல்லும் என்று பெரும்பாலானோர் கணிக்காத நிலையில், தொடர் தொடங்கியது முதலே இந்த அணிகள் சிறப்பாக ஆடின. டெல்லி அணி கடைசியில் சொதப்பியதால் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.
விராட் கோலி:
இந்த நிலையில், பஞ்சாப் - ஆர்சிபி இரு அணிகளும் இன்று களத்தில் கோப்பைக்காக இறங்குகின்றன. 18 வருடங்களாக இந்த இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த அணிகளின் ரசிகர்கள் ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒரே ஒரு நபருக்காகவே பெரிதும் விரும்புகின்றனர். ஆர்சிபி அணியையும், விராட் கோலியையும் பிரிக்கவே இயலாது. அவர் கேப்டன்சியை கையில் எடுத்த பிறகு ஆர்சிபி அணிக்கான ரசிகர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்தது.
கெயில், டிவிலியர்ஸ் என பலரும் ஆர்சிபி அணிக்காக ஆடியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் முதன்மை தேர்வாகவே விராட் கோலியே இருக்கிறார். டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற விராட் கோலிக்கு இந்த மகுடம் மட்டும் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. இதனால், அவரது கையில் ஐபிஎல் கோப்பையை ஏந்தி அழகு பார்க்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான ஆர்சிபி ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
ப்ரீத்தி ஜிந்தா:
அதேபோல, 18 ஆண்டுகள் விராட் கோலி ஆர்சிபிக்காக போராடி வருவது போல 18 ஆண்டுகளாக பஞ்சாப்பிற்காக போராடி வருபவர் ப்ரீத்தி ஜிந்தா. ஐபிஎல் தொடரில் ஒரு அணியை திறம்ப வழிநடத்துவது மிகப்பெரிய சவால் ஆகும். அந்த சவாலை 18 ஆண்டுகளாக சமாளித்து அணியை நிர்வகித்து வருபவர் ப்ரீத்தி ஜிந்தா. 18 ஆண்டுகளில் அவர்கள் இறுதிப்போட்டிக்கு வருவது இது 2வது முறையாகும்.
கடந்த கால ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தோல்விகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வரும் அணிகளில் பஞ்சாப்பும் ஒன்றாகும். இந்த சீசனில் மிக வலுவான அணியை உருவாக்கி பாண்டிங் பயிற்சியில் ஸ்ரேயாஸ் கேப்டன்சியில் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணி பஞ்சாப். கோப்பையை வென்று ப்ரீத்தி ஜிந்தா கையில் தர வேண்டும் என்று பஞ்சாப் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
18 ஆண்டுகால உழைப்பு:
18 ஆண்டுகளாக இந்த ஒரே ஒரு கோப்பைக்காக தொடர்ந்து உழைத்து வரும் விராட் கோலி மற்றும் ப்ரீத்தி ஜிந்தா இருவரில் இன்று ஒருவரின் கண்களின் ஆனந்த கண்ணீரும், ஒருவரின் கண்களில் வலியின் கண்ணீரும் வழிந்தோடுவது மட்டும் உறுதி.




















