IPL CSK Vs RR: அப்போ கடைசி வரைக்கும் நமக்கு கடைசி இடம் தானா.? ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி
IPL 2025 CSK Vs RR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற்றது. இதனால், சிஎஸ்கே தொடர்ந்து கடைசி இடத்திலேயே உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதனால், சிஎஸ்கே அணி கடைசி இடத்திலேயே இருப்பதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மாத்தே, பிரெவிஸ் அதிரடியில் 187 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களத்தில் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கான்வே 10 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். பின்னர், ஆட வந்த உர்வில் படேல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஒரு முனையில் ஆயுஷ் மாத்ரே மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 43 ரன்கள் எடுத்திருந்தபோது மாத்ரேவும் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதையடுத்து, களத்திற்கு வந்த ப்ரீவிஸ், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். ஆகாஷ் மத்வால் வீசிய பந்தில் அவரும் அவுட்டானார்.
இறுதியில், ஜோடி சேர்ந்த தோனி, துபே ரன்கள் எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், ராஜஸ்தானி அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியை கட்டுப்படுத்தினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 187 ரன்களை எடுத்தது. இதனால் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ராஜஸ்தான். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய யுத்வீர் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
17 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய ராஜஸ்தான்
இதைத் தொடர்ந்து 188 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான துவக்கத்தை கொடுத்தனர். அதிரடிக்கு பஞ்சமில்லாமல் ஜெய்ஷவால் மற்றும் சூர்யவன்ஷி ஆடிவந்த நிலையில், 19 பந்துகளில் 2 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஷ்வால் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் சஞ்ச சாம்சன் களமிறங்கி சூர்யவன்ஷியுடன் இணைந்து சிறப்பாக ஆடிவந்த நிலையில், 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரியான் பராக் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த சூர்யவன்ஷி 33 பந்துகளில் 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரியான் பராக்கும் 3 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஜுரேல், வழக்கம்போல் தனது அதிரடியை காட்ட, ஹெட்மெயரும் தன் பங்கை சிறப்பாக செய்தார். இறுதியில், 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. ஜுரேல் 12 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களுடனும், ஹெட்மெயர் 5 பந்துகளில் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் அஷ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம், சிஎஸ்கே ஒரு படியாவது மேலே ஏறி, கடைசி இடத்திலிருந்து மீண்டு வரும் என எதிர்பார்த்திருந்த அந்த அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.




















