PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிஃபயர் முதலாம் சுற்றில் ஆடத் தகுதி பெற்றுள்ளது. இதனால், மும்பை அணி எலிமினேட்டர் சுற்றுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை - பஞ்சாப் அணிகள் இந்த தொடரில் தங்களது கடைசி லீக் போட்டியில் ஆடின. இரு அணிகளும் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் சுற்றுக்கும், தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றுக்கும் செல்லும் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த வெற்றி அவசியமானதாக இருந்தது.
185 ரன்கள் டார்கெட்:
இந்த நிலையில், டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு பஞ்சாப் பந்துவீச்சால் குடைச்சல் தந்தனர். சூர்யகுமார் யாதவ் அதிரடியான 57 ரன்கள் எடுத்ததால் மும்பை அணி பஞ்சாப்பிற்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
மிரட்டிய இங்கிலிஷ் - பிரியன்ஷ் ஆர்யா:
இதையடுத்து, பஞ்சாப் அணிக்காக பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் ஆட்டத்தை தொடங்கினர். பிரப்சிம்ரன் நிதானமாகவே ஆட பிரியன்ஷ் ஆர்யா அசத்தலாக ஆடினார். 16 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்திருந்த பிரப்சிம்ரன் பும்ரா பந்தில் அவுட்டானார். இதன்பின்னர், ஜோஷ் இங்கிலிஷ் - பிரியன்ஷ் ஆர்யா ஜோடி சேர்ந்தது.
இந்த ஜோடி மொத்த ஆட்டத்தையும் பஞ்சாப் வசம் கொண்டு வந்தனர். குறிப்பாக, இங்கிலிஷ் அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ப்ரியன்ஷ் ஆர்யாவும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இதனால், பஞ்சாப் அணியின் ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சென்று கொண்டிருந்தது.
அசத்தல் அரைசதம்:
இந்த ஜோடியை பிரிக்க தீபக் சாஹர், பும்ரா, சான்ட்னர், அஸ்வனி குமார் ஆகியோருடன் பாண்ட்யாவும் பந்துவீசினார். ஆனால், இந்த ஜோடி மிகவும் எளிதாக ஆடியது. அபாரமாக ஆடிய இங்கிலிஷ் 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் அரைசதம் விளாசிய சில நிமிடங்களில் பிரியன்ஷ் ஆர்யாவும் அரைசதம் விளாசினார். அபாரமாக ஆடிய இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது.
அபாரமாக ஆடிக்கொண்டிருந்த பிரியன்ஷ் ஆர்யா சான்ட்னர் சுழலில் சிக்கினார். சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்த நிலையில் அவர் அவுட்டானார். அவர் 35 பந்துகளில் 9 பவுண்டரி 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, கேப்டன் ஸ்ரேயாஸ் - இங்கிலிஷ் ஜோடி சேர்ந்தனர். கடைசி 30 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது.
நிதானமும், அதிரடியும்:
இங்கிலிஷ் - ஸ்ரேயாஸ் நிதானமாக ஆடினர். பஞ்சாப்பிற்கு நெருக்கடி கொடுக்க கேப்டன் பாண்ட்யா பும்ரா, சான்ட்னர், ஜேக்ஸ் ஆகியோருக்கு பவுலிங் அளித்தார். ஆனாலும், இந்த ஜோடி தேவையான பந்துகளை பவுண்டரிக்கு விளாசியும், மற்ற பந்துகளில் ஓரிரு ரன்களாகவும் எடுக்க கடைசி 18 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
வெற்றிக்கு 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஜோஷ் இங்கிலிஷ் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதே ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் விளாச 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே பஞ்சாப்பிற்கு தேவைப்பட்டது.
குவாலிஃபயரில் பஞ்சாப்:
கடைசியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 1 சுற்றுக்கு தகுதி பெற்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேகல் வதேரா 2 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் 19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பஞ்சாப் குவாலிஃபயர் முதலாம் போட்டியில் ஆடத்தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணி எலிமினேட்டர் சுற்றில் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.




















