தொடக்கத்தில் சொதப்பிய பல்தான்ஸ்.. ஹீரோவாக மாறிய சூரியகுமார்.. டெல்லிக்கு சங்கா?
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 180 ரன்களை எடுத்தது.

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை அணி 180 ரன்களை குவித்துள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது டெல்லி அணிக்கு அவசியமாகிறது.
தொடக்கத்தில் சொதப்பிய பல்தான்ஸ்:
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே, மூன்று அணிகள் தகுதி பெற்றுவிட்டன. நான்காவது இடத்தை பிடிப்பதற்கு மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆட வந்த மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 5 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். வில் ஜாக்ஸ், 21 ரன்களுக்கும் திலக் வர்மா 27 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
எகிறி அடிக்குமா டெல்லி?
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 180 ரன்களை எடுத்தது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் 73 ரன்களை எடுத்தார். 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கிளமிறங்க உள்ளது டெல்லி.
பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் மும்பை அணி தற்போது டெல்லி அணியை விட முன்னிலையில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர். 12 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் டெல்லி அணி ஒரு புள்ளி பின்தங்கியுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. மும்பை அணி டெல்லி அணியை வீழ்த்தினால், அவர்கள் அதிகாரப்பூர்வமாக 16 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
அதே நேரத்தில் இரண்டிலும் வென்றால் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி செய்யப்படும். ஒரு வேளை ஒரு போட்டியில் டெல்லி அணி வென்றால், மும்பை அணி தங்களது கடைசி லீக் போட்டியிலும் தோற்க வேண்டும். இது நடந்தால் தான் டெல்லி அணி பிளே ஆஃப் செல்ல முடியும்.




















