IPL 2025 MI vs DC: செமத்தியான மேட்ச்.. கடைசி வரை திக்..திக்..! டெல்லிக்கு முதல் தோல்வி தந்த மும்பை
IPL 2025 MI vs DC: நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காத டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

IPL 2025 MI vs DC: நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட தோல்வியே சந்திக்காத டெல்லி அணியும், ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற மும்பை அணியும் இன்று மோதின. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு ரிக்கெல்டன், சூர்யகுமார், திலக் வர்மா அதிரடியால் 205 ரன்களை எட்டினார். இதையடுத்து, 206 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் டெல்லி களமிறங்கியது.
மிரட்டிய கருண் நாயர்:
ஆட்டத்தின் முதல் பந்திலே தீபக் சாஹர் ஓவரில் டெல்லி வீரர் ஜேம்ஸ் ப்ரேசர் டக் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு அபிஷேக் போரல் - கருண் நாயர் ஜோடி சேர்ந்தனர். இந்திய அணியில் முறையான வாய்ப்பு கிடைக்காத கருண் நாயர் இன்றைய போட்டியில் தான் யார்? என்பதை நிரூபித்தார்.
குறிப்பாக, பும்ராவை விளாசித் தள்ளினார். பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, சான்ட்னர் என யார் வீசினாலும் கருண் நாயர் அதிரடி காட்டினார். கருண் நாயர் பவுண்டரி, சிக்ஸர் என விளாச டெல்லி அணி ரன்ரேட் ஓவருக்கு 15 ரன்கள் என்ற வீதத்தில் சென்றது.
அடுத்தடுத்து சரிவு:
அபாரமாக ஆடிய கருண் நாயர் அரைசதம் விளாச, 10.2 ஓவரில் அபிஷேக் போரல் அவுட்டானார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் அடித்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கருண் நாயர் சான்ட்னர் சுழலில் போல்ட் ஆனார். அவர் 40 பந்துகளில் 12 பவுண்டரி 5 சிக்ஸருடன் 89 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அதன்பின்பு, டெல்லி அணி சிறிது தடுமாறியது. கேப்டன் அக்ஷர் படேல் 9 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ஸ்டப்ஸ் 1 ரன்னில் அவுட்டானார். 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ராகுல் - அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். கடைசி 36 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது.
திக் திக்:
முக்கியமான கட்டத்தில் கரண் சர்மா கே.எல்.ராகுலை அவுட்டாக்கினார். கரண் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 15 ரன்னில் அவுட்டானார். இதனால், அசுதோஷ் சர்மா மீது அழுத்தம் விழுந்தது. கடைசி கட்டத்தில் போல்ட் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
இதனால், கடைசி 18 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் விப்ராஜ் அதிரடிக்கு மாறினார். சிக்ஸர், பவுண்டரி விளாசிய நிலையில் விப்ராஜ் ஸ்டம்பிங் ஆனார். விக்கெட்டுகள் விழுந்தாலும் அசுதோஷ் சர்மா போராடினார். பும்ரா ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அசுதோஷ் சர்மா 2வது ரன் எடுக்க ஓடியபோது அவுட்டானார். அடுத்து வந்த குல்தீப் யாதவ்வும் ரன் அவுட்டானார். ஒரே ஓவரில் 2 ரன் அவுட்கள் வந்ததால் வெற்றி மும்பை வசம் சென்றது. அதே ஓவரில் 3வது ரன் அவுட்டும் ஆக மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

