IPL 2025 LSG vs DC: வெற்றி.. வெற்றி.. லக்னோவை கதறவிட்டு டெல்லி அபார வெற்றி!
IPL 2025 LSG vs DC: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோவிற்கு மார்க்ரம், மார்ஷ் சிறந்த தொடக்கம் அளித்தும் பின்வரிசை வீரர்கள் அதை சரியாக பயன்படுத்ததால் 160 ரன்களை மட்டுமே டெல்லிக்கு இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
160 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, 160 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அபிஷேக் போரல் - கருண் நாயர் ஜோடி களமிறங்கியது. கருண் நாயர் பவுண்டரி, சிக்ஸர் என விளாச 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். கே.எல்.ராகுலுடன் அபிஷேக் போரலும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர்.
போரல் அதிரடி அரைசதம்:
இதனால், டெல்லியின் ரன் ரேட் எகிறியது. அபிஷேக் போரல் பவுண்டரியாகவும், சிக்ஸரும் விளாசினார். இதனால், 10 ரன்களுக்கு மேல் ரன் ரேட் எகிறியது. அபிஷேக் போரல் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார். 36 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார். அவரை மார்க்ரம் தனது சுழலால் அவுட்டாக்கினார்.
டெல்லி வெற்றி:
இதையடுத்து, கே.எல்.ராகுல் - கேப்டன் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தனர். இலக்கு குறைவாக இருந்ததால் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸரும் விளாச கடைசி 36 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. அக்ஷர் படேல் அதிரடி காட்ட கே.எல்.ராகுல் நிதானமாகவே ஆடினார். அக்ஷர் படேல் சிக்ஸராக விளாச கடைசி 18 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். கடைசியில் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எட்டியது. டெல்லி அணி இதன் மூலம் 12 புள்ளிகளுடன் வலுவாக உள்ளது. கே.எல்,ராகுல் 42 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்களுடனும், கேப்டன் அக்ஷர் படேல் 20 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

