IPL 2025 GT vs LSG: பட்டாசாய் தொடங்கி புஸ்வானமாய் போன குஜராத்! 181 ரன்களை எட்டுமா லக்னோ?
IPL 2025 GT vs LSG: லக்னோ அணிக்கு குஜராத் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பட்டாசு தொடக்கம்:
இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய சாய் சுதர்சன் - அபமன்கில் அதிரடி காட்டினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். குறிப்பாக கேப்டன் கில் அதிரடி காட்டினார். இதனால், குஜராத் ரன் மின்னல் வேகத்தில் எகிறியது.
சுதர்சன் - சுப்மன்கில் ஜோடியை பிரிக்க ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் ரதி, ஆவேஷ்கான், பிஷ்னோய் ஆகியோரை பயன்படுத்தினார்கள். ஆனாலும், இந்த ஜோடி சிறப்பாக ஆடியதுடன் இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை ஆவேஷ்கான் பிரித்தார். அவரது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த சுப்மன்கில் 38 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கட்டுப்படுத்திய லக்னோ:
அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் பிஷ்னோய் சுழலில் சாய் சுதர்சன் 37 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரியுடன் 56 ரன்களுக்கு அவுட்டானார். இந்த ஜோடி பிரிந்த பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை குஜராத் பறிகொடுத்தது. அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
120 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த குஜராத் அணி, 127 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு குஜராத் அணி மீது லக்னோ அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன்பின்பு, குஜராத் தடுமாறத் தொடங்கியது. 12வது ஓவரில் 120 ரன்களை எட்டிய குஜராத் 18வது ஓவரில்தான் 150 ரன்களைத் தொட்டது.
பவுலிங்கில் மிரட்டல்:
கடைசி கட்டத்தில் ரூதர்போர்டு, ஷாருக்கான் அதிரடி காட்ட முயற்சித்தனர். ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ரதி, பிஷ்னோய் ஓரளவு கட்டுக்கோப்பாக பந்துவீசினர். கடைசி கட்டத்தில் ரூதர்போர்டு அதிரடி காட்ட முயற்சித்தார். ஆனால், அவர் ஷர்துல் தாக்கூர் பந்தில் அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த ராகுல் திவேதியா டக் அவுட்டாக குஜராத் அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. இதனால், லக்னோவிற்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.