IPL 2025 CSK vs SRH: போனியே ஆகாத டிக்கெட்! சென்னை போட்டிக்கு ஆர்வம் காட்டாத ரசிகர்கள்! சிஎஸ்கே-வுக்கு இந்த நிலையா?
IPL 2025 CSK vs SRH: சென்னை அணி தொடர்ந்து மோசமான சூழலில் ஆடி வரும் நிலையில் சென்னை - ஐதராபாத் அணி ஆடும் போட்டிக்கான டிக்கெட் மந்தமாக நடந்து வருகிறது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் மோசமான சூழலுக்கு ஆளாகியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகும். 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்த தொடரில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆர்வம் காட்டாத ரசிகர்கள்:
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்த தொடரில் ஆடும் விதம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. எந்தவித போராட்டமும் இல்லாமல் சென்னை அணி எதிரணியிடம் சரண் அடைவது ரசிகர்களுக்கு மிகவும் வேதனைகரமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் இரண்டுமே நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள சென்னையும், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணியும் ஆடும் போட்டியாக இந்த போட்டி மாறியுள்ளது. வழக்கமாக சேப்பாக்கத்தில் சென்னை அணி ஆடும் போட்டிகள் என்றாலே டிக்கெட்டுகள் கிடைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இணையவழி டிக்கெட் விற்பனைக்கு பிறகு பன்மடங்கு அதிக விலைக்கு சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது.
டிக்கெட் விற்பனை மந்தம்:
ஆனால், இந்த சீசனில் சென்னை அணி ஆடும் விதம் காரணமாக டிக்கெட்டுகள் விற்பனை மந்தமாகியுள்ளது. குறிப்பாக, மும்பை, பெங்களூர் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு பிறகு சென்னை அணி ஆடிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மந்தமாகி வருகிறது. இந்த சூழலில், நாளை சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாகவே நடைபெற்றது.
பலரும் இந்த போட்டியை காண டிக்கெட்டுகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது. ருதுராஜ் காயத்தில் வெளியேறிய பிறகு தோனி கேப்டன்சியை எடுத்த பிறகும் சென்னை அணி தோற்றதும் இதற்கு ஒரு காரணம். கடந்த போட்டியில் வான்கடே மைதானத்தில் இளம் வீரர்கள் ஆயுஷ் மேரே, ஷைக் ரஷீத் தந்த அதிரடி தொடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
மீண்டு வருமா?
தொடர் தோல்வி, அணியின் சீனியர் வீரர்களின் மோசமான பேட்டிங், பேட்டிங் ஆடும் விதத்தில் போராட்ட குணம் இன்மை உள்ளிட்ட காரணங்களால் நாளை நடக்கும் போட்டியில் நேரில் காணும் ரசிகர்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - மும்பை போட்டியின்போதே
ஹாட்ஸ்டாரில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மொத்த ஆட்ட வியூகத்தையும் சிஎஸ்கே மாற்றி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பழைய ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே சென்னை அணிக்கான போட்டிக்கான ரசிகர்கள் கூட்டம் மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் திரளும்.

