8ஆவது தோல்வி! சென்னை அணியை பொளந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மிரட்டிய பஞ்சாப்
சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் அணி.
சென்னை அணிக்கு 8ஆவது தோல்வி:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த சாம் கரன் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் போதுமான ரன்கள் எடுக்க தவறிவிட்டனர். 17 ரன்களில் ஜடேஜா அவுட்டானார். 32 ரன்கள் எடுத்திருந்தபோது, டெவால்ட் ப்ரீவிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சாய்ந்தபோதிலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாம் கரன் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 19.2 ஓவர்கள் முடிவில் 190 ரன்களுக்கு சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மீண்டும் மிரட்டலை தொடங்கிய பஞ்சாப்:
இதையடுத்து, ஆட தொடங்கிய பஞ்சாப், ஆரம்பமே அமர்க்களமாக ஆடியது. தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் பவுண்டரிகளாக விளாசினர். 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது, பிரியான்ஷ் ஆர்யா அவுட்டானார்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ் ஐயர், சென்னை அணி பவுலர்களை மிரட்டி எடுத்தனர். சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் 54 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர், தொடர்ந்து அதிரடி காட்டினார்.
இறுதியில், 19.3 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப். அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். சென்னை அணியை பொறுத்தவரையில், பதிரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிக்க: Rohit Sharma: தோனிக்கு அப்புறம் யாருடா? ரோகித் சர்மான்னு பேருடா..! ஜனநாயகனின் பிறந்தநாள் - சாதனை பட்டியல்




















