IPL 2025 CSK vs DC: சென்னை ஹாட்ரிக் தோல்வி! போராடாமலே தோற்ற சிஎஸ்கே! 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி மாஸ்!
IPL 2025 CSK vs DC: சென்னை அணிக்கு எதிராக 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி அணி சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி இன்று சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி கே.எல்.ராகுல், அபிஷேக் போரலின் அதிரடியால் 20 ஓவர்களில் 183 ரன்களை குவித்தது.
184 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முகேஷ் குமார் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரிலே ரவீந்திரா 3 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய பிறகு ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், அவர் 4 பந்தில் 5 ரன்னில் ருதுராஜ் 5 ரன்களில் ஸ்டார்க் அவுட்டானார். 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.
பவுலிங் அசத்தல்:
மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த போட்டியில் களமிறக்கப்பட்ட கான்வே-வை விப்ராஜ் நிகாம் அவுட்டாக்கினார். அவர் 14 பந்தில் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலே எல்பிடபுள்யூ ஆன நிலையில், டெல்லி அணி ரிவியூ எடுக்காததால் அவர் தப்பினார்.
அதன்பின்னர், விஜய் சங்கர் - ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். ஸ்டார்க், முகேஷ் குமார், மோகித் சர்மா, விப்ராஜ், குல்தீப் மாறி, மாறி பந்துவீச்சு தாக்குதல் நடத்தினர். இதனால், இவர்கள் இருவரால் அதிரடி காட்ட இயலவில்லை. ஓரிரு ரன்களாகவே அடித்தனர். இதனால், சென்னை அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் அதிகரித்தது.
விஜய் சங்கர் - தோனி:
அதிரடி காட்டவே முடியாமல் இருவரும் தடுமாறினர். ஷிவம் துபே பவுண்டரி, சிக்ஸர் அடித்தாலும் விப்ராஜ் நிகாம் சுழலில் ஸ்டப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஷிவம் துபே 18 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ஜடேஜா 2 ரன்னில் குல்தீப் சுழலில் அவுட்டாக 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், விஜய் சங்கருடன் தோனி ஜோடி சேர்ந்தனர்.
விஜய் சங்கர் மிகவும் நிதானமாகவே ஆடினார். தோனியும் ஓரிரு ரன்களாகவே எடுத்தனர். இதனால், ஆட்டம் சென்னை அணியின் கையை விட்டுச் சென்றது. மிகவும் நிதானமாக ஆடிய விஜய் சங்கர் அரைசதம் விளாசினார். ஷிவம் துபேவிற்கு பிறகு இந்த போட்டியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தோனி முகேஷ்குமார் பந்தில் சிக்ஸர் அடித்தார்.
ஹாட்ரிக் தோல்வி:
கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை விஜய் சங்கர் சிக்ஸருக்கு விளாசினார். ஆனாலும், தோல்வி உறுதியான நிலையில் சென்னை அணி 20 ஓவரின் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் ஹாட்ரிக் வெற்றியையும் பெற்று அசத்தியுள்ளது. 4 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வி ஆகும். டெல்லி அணி 2010ம் ஆண்டுக்கு பிறகு 15 வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணிக்காக இறுதிவரை அவுட்டாகாமல் விஜய் சங்கர் 54 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி அவுட்டாகாமல் 26 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.




















