Watch Video: அன்றே கேப்டன்சியில் இருந்து தோனியை நீக்கிய சஞ்சீவ் கோயங்கா.. இன்று கே.எல்.ராகுலிடம் வாக்குவாதம்.. என்ன நடந்தது?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை கடுமையாக பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2024ன் நேற்றைய 57வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
பின்னர் இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை கடுமையாக பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு, சஞ்சீவ் கோயங்காவுக்கும், கே.எல்.ராகுலுக்கும் இடையே கடுமையான விவாதம் நடந்தது. ஆனால், என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரியவில்லை. அந்த வீடியோவில், சஞ்சீவ் கோயங்காவும் மிகவும் கோவமாக பேசுவது போன்றும், கே.எல்.ராகுல் அதற்கு விளக்கமளிக்க முயற்சித்து அமைதியை கடைப்பிடிப்பது போன்றும் காணப்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த சூடான விவாதம் பல்வேறு ஊகங்களை தூண்டியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் #KLRahul என்ற ஹேஸ்டேக்கை போட்டு நெட்டிசன்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
KL Rahul appears to be a corporate majdoor meeting with his Boss Goenka for an appraisal.
— Ex Bhakt (@exbhakt_) May 9, 2024
This is unacceptable behaviour 😡#KLRahul #SRHvLSG #SRHvsLSG pic.twitter.com/twyNVnTOGn
மேலும், மைதானத்திற்கு நடுவே இந்த விவாதங்கள் நடைபெற்றபோது, வர்ணனையாளர்கள் இதுபோன்ற உரையாடல்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவ் கோயங்கா:
2017ம் ஆண்டு மகேந்திர சிங் தோனியை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி பிரபலமானவர்தான் இந்த சஞ்சீவ் கோயங்கா.
கடந்த 2016ம் ஆண்டு தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்து வெளியேறியது. இதையடுத்து, அந்த அணியின் உரிமையாளராக இருந்த சஞ்சீவ் கோயங்கா, 2017ம் ஆண்டு தோனியை கேப்டன்சியில் இருந்து நீக்கி ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தார். இவரது தலைமையில் கீழ் அந்தாண்டு ரைசிங் பினே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி இறுதிப்போட்டி வரை சென்றது.
அப்போது தோனியை கேப்டனாக நீக்கியது குறித்து பேசிய கோயங்கா, “நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சிறந்த மனம் கொண்டவர். அவர் ஒரு சிறந்த தலைவர். கடந்த 14 மாதங்களில் நான் அவரை பற்றி தெரிந்து கொண்டதால், ஒரு தனி மனிதராக பாராட்டுகிறேன்.
தோனியை நீக்கியது கடினமான முடிவு. ஒரு இளைஞர் அணியை வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவதால், அவரிடம் கேப்டன் பணியை ஒப்படைத்தோம்” என்று தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த சாக்ஷி தோனி, தனது சமூக வலைதளங்களில், “ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது, அது எறும்புகளைத் தின்னும். பறவை இறந்தவுடன், எறும்புகள் பறவையை சாப்பிடுகின்றன. காலமும் சூழ்நிலையும் எந்த நேரத்திலும் மாறலாம். வாழ்க்கையில் யாரையும் மதிப்பிழக்கவோ புண்படுத்தவோ கூடாது. இன்று நீங்கள் சக்தி வாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் நேரம் உங்களை விட சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மரம் ஒரு மில்லியன் தீப்பெட்டிகளை உருவாக்குகிறது. ஆனால் ஒரு மில்லியன் மரங்களை எரிக்க ஒரு தீக்குச்சி மட்டுமே தேவை. எனவே நல்லவனாக இருந்து நல்லதை செய்.” என தெரிவித்திருந்தார்.