Rohit Sharma 250 IPL: ”சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து”: 250வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா
Rohit Sharma 250 IPL: ரோகித் சர்மா தனது 250வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று களமிறங்கவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடர் என்றால் அதில் ஐபிஎல் தொடருக்கு முக்கிய பங்கு உண்டு. ஐபிஎல் தொடரினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்பத்திய வீரர்கள் பலர் உள்ளனர். ஐபிஎல் 2008ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படுகின்றது. இந்த ஐபிஎல் தொடரினால் இந்திய அணியில் தனகான இடத்தினை நிரந்தரமாக்கியவர்களை பட்டியலிட்டால் அதில் இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் இருக்கும்.
ஆமாம் அது உண்மைதான். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பெற்றிருந்தாலும், இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு நிலையான இடம் கிடைக்காமலே இருந்தது. குறிப்பாக தோனி தலைமையிலான 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
ஆனால் 2013ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குள் ஐந்து முறை மும்பை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல், கோப்பையையும் வெல்லவைத்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஐந்துமுறை கோப்பையை வென்ற முதல் கேப்டன் மற்றும் முதல் அணி என்ற பெருமையை அவர் பெற்றார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல் மும்பை அணியை திறம்பட வழிநடத்தியதினால், இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தினை நிலையாக அமைத்துக் கொண்டார் ரோகித் சர்மா. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றார்.
இப்படி ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் தனக்கான நிலையான இடத்தினை ஏற்படுத்திக்கொண்டது மட்டும் இல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக ரோகித் சர்மா உருவாகியுள்ளார் என்றால் அவரின் உழைப்பை நினைத்து உண்மையாகவே மெல்சிலிர்க்கின்றது. அப்படிப்பட்ட ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தனது 250வது போட்டில் இன்று அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார். ரோகித் சர்மா தனது முதல் ஐபிஎல் போட்டியில் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடினார்.
இதுவரை ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மட்டும் 6 ஆயிரத்து 472 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் 42 அரைசதங்களும் அடங்கும். இதில் ரோகித் சர்மா 582 பவுண்டரிகள் விளாசியதும் 272 சிக்ஸர்கள் பறக்கவிட்டதும் அடங்கும். ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து மொத்தம் 15 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மா தனது 250வது போட்டியில் களமிறங்கவுள்ளதால் அவருக்கு ரசிகர்கள் உற்சாகமூட்ட தீவிரமாக தயாராகி வருகின்றனர்.