MI vs CSK: புதிய கேப்டன்கள் தலைமையில் எல்கிளாசிக்கோ மோதல்! சொந்த மண்ணில் சென்னையை எதிர்கொள்ளும் மும்பை?
IPL 2024 MI vs CSK: நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளை வான்கடே மைதானத்தில் மோத உள்ளது.
ஐ.பி.எல். தொடரில் அதிகப்படியான ரசிர்களால் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுக்குத்தான். இந்த போட்டியின் போது ஆடுகளத்தில் வீரர்களும் மைதானத்திலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள். இதனாலே ஐபிஎல் தொடரின் எல்கிளாசிக்கோ போட்டி என்றாலே அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியை ரசிகர்கள் டிக் செய்து விடுவார்கள்.
நடப்பு தொடரில்
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் நாளை அதாவது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களது ஆறாவது லீக் போட்டியில் நாளை மோதவுள்ளது.
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை மொத்தம் 38 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் மும்பை அணி 21 போட்டிகளிலும் சென்னை அணி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நாளைய போட்டி நடைபெறவுள்ள வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் மோதியுள்ளது. அதிலும் மும்பை அணியின் கரங்களே உயர்ந்துள்ளது. மும்பை அணி 7 போட்டிகளிலும் சென்னை அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகளில் சென்னை அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மும்பை அணி தோல்வியைச் சந்தித்தது. இதனால் நாளைய போட்டி மிகவும் முக்கியப்போட்டியாக பார்க்கப்படுகின்றது.
புதிய கேப்டன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு தனது புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டினை நியமித்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. இரு அணிகளும் புதி கேப்டன்களின் தலைமையில் களமிறங்குவதால் இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் புதிய கேப்டன்கள் தலைமையில் எல்கிளாசிக்கோ போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை காண எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரின் 4 இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 2010ஆம் ஆண்டு சென்னை அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் மூன்று இறுதிப் போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றது. குறிப்பாக தோனியை எதிர்த்து இறுதிப்போட்டியில் மூன்று முறை வென்ற கேப்டன் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மட்டும்தான்.