(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: இது 17வது ஐபிஎல் சீசன்! இதுவரை நடந்த 16 சீசன்களிலும் விளையாடிய 5 வீரர்கள் யார் யார் தெரியுமா?
IPL 2024: 2008 முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் பல வீரர்கள் இன்னும் உள்ளனர். அந்த வீரர்கள் யார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா..?
List Of Players Who Featured Since IPL 2008: கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியானது தற்போது வரை 16 சீசன்களை கடந்து, 17வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. முதல் சீசனில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால், முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் பல வீரர்கள் இன்னும் உள்ளனர். அந்த வீரர்கள் யார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா..? மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த வீரர்கள் 16 சீசன்களிலும் குறைந்தது 1 போட்டியையாவது விளையாடியுள்ளனர். இப்போது இந்த கிரிக்கெட் வீரர்கள் 17வது சீசனுக்கு தயாராகிவிட்டனர்.
மகேந்திர சிங் தோனி:
ஐபிஎல் முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி உள்ளார். இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2008 முதல் சீசனில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2016 மற்றும் 2017ல் தடை செய்யப்பட்டபோது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக 2 சீசன்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி:
ஐபிஎல் முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார். விராட் கோலி ஐபிஎல் 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து வருகிறார். விராட் கோலி இதுவரை 237 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 130.02 ஸ்டிரைக் ரேட்டிலும் 37.25 சராசரியிலும் 7263 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது தான் விளையாடும் பெங்களூரு அணிக்கு ஒருமுறையாவது கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே விராட் கோலியின் கனவாக உள்ளது.
தினேஷ் கார்த்திக்:
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2008 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்தார். அதன்பிறகு, தொடர்ந்து 16 சீசன்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை, தினேஷ் கார்த்திக் பஞ்சாப், டெல்லி, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக விளையாடியுள்ளார். தினேஷ் கார்த்திக் 242 ஐபிஎல் போட்டிகளில் 4516 ரன்கள் குவித்துள்ளார்.
ஷிகர் தவான்:
ஷிகர் தவான் ஐபிஎல் 2008 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அதன் பிறகு அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து, ஷிகர் தவான் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ஐபிஎல் தொடரின் 217 போட்டிகளில், ஷிகர் தவான் 127.16 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 35.19 சராசரியுடன் 6616 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோஹித் சர்மா:
ரோஹித் சர்மா 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானார். அந்த சீசனில் அவர் டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு, ரோஹித் சர்மா 2011 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். இதுவரை ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில், ரோஹித் சர்மா 243 ஐபிஎல் போட்டிகளில் 130.05 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 29.58 சராசரியுடன் 6211 ரன்கள் எடுத்துள்ளார்.