MS Dhoni: தோனிக்கு மருந்தே அவரோட ரசிகர்கள்தான்! பின்வரிசையில் களமிறங்க காரணம் தெரியுமா?
MS Dhoni: சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடப்பு சீசனில் ஒரு வீரராக விளையாடி வருகின்றார். அவர் 42 வயதிலும் தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தொடர்ந்து ஆடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக பேட்டிங்கில் தோனி 9-வது வீரராக களமிறங்கினார். அந்த போட்டியில் விக்கெட்டுகள் விழந்தாலும் ஓவர்கள் மீதமிருந்த காரணத்தால் சான்டனர், தாக்கூர் ஆகியோர் அவுட்டான பிறகு 9-வதாக தோனி இறங்கினார். அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி தோனி வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
தோனி மீது விமர்சனம்:
தோனி 9-வது வீரராக இறங்கியது பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்டது. தோனி ஏன் பேட்டிங் செய்ய வர வேண்டும், அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் வேகபந்து வீச்சாளார் ஒருவரை தேர்வு செய்தால், அது அணிக்கு நன்மையை தரும் என ஹர்பஜன் சிங் விமர்சித்திருந்தார்.
சி.எஸ்.கே ரசிகர்களும் தோனி ஏன் இந்த முடிவை எடுத்தார் என கேள்விகளை சமூக வலைதளங்களில் முன்வைத்த வண்ணம் இருந்தனர். ஆனால் இதற்கெல்லாம் காரணம் காயம்தான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே நடப்பு சீசனில் தோனி ஓடி ரன்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.
கிழிந்த தசைநார்:
2023 ஐபிஎல் தொடரில் இருந்தே தோனிக்கு காலில் பிரச்னை இருந்து வருகிறது. தொடர் முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தோனிக்கு முழங்காலில் தசைநார் கிழிசல் ஏற்படுள்ளது. இருப்பினும், சென்னை அணியின் நலன் கருதி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. போட்டியின் போது 5 அல்லது 6- வீரராக கமிறங்கவும், ஓடி அதிக ரன்கள் எடுக்க முடியாது என்பதால் ஃபோர்ஸ், சிக்ஸர்கள் மட்டுமே அடிப்பது போன்று திட்டமிடப்பட்டது. இந்த சூழலில்தான் கேப்டன் பதவியை ருதுராஜ் வசம் ஒப்படைத்து விட்டு, பின் இருந்து அணியை தோனி வழிநடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தசைநார் கிழிசல் பெரிதாக மாற, ஓய்வெடுக்கும் படி தோனியை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், வலிகளை தாங்கி கொள்ள மருத்துகளை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியும் தோனி தொடர்து விளையாடுவதற்கான காரணம், சி.எஸ்.கே. அணியில் மாற்று விக்கெட் கீப்பர் இல்லாதது தான். டெவான் கான்வேயும் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை, அதுமட்டுமல்லாமல், ருதுராஜ் கேப்டனாக இருந்தாலும், அணியை வழிநடத்துவது தோனிதான். அதோடு, பல முக்கிய வீரர்களும் காயத்தால் அணியில் விளையாட வில்லை. தீபக் சஹார், பதிரானா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் போன்றோரும் தற்போது மொத்தமாக தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
ரசிகர்களே மருந்து:
இப்படியான சூழலில் தான், சி.எஸ்.கே வை தாங்கி பிடிக்கிறார் தோனி. காயம் ஏற்பட்டாலும் அதை காரணம் காட்டி ஒதுங்க நினைக்கவில்லை தோனி. அணியை எப்படியாவது கரை சேர்ந்து விட்டு ஒதுங்கி கொள்ளலாம் என்ற முடிவோடு இருப்பதாக அணி நிர்வாக வட்டாரங்கள் கூறுகிறது. சென்னை அணிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் தோனிக்கு ஆதரவாக இருப்பது அவரின் தற்போதைய காயத்திற்கான மருந்தாக இருக்கிறது.