IPL 2023 Watch Video: நெருக்கடியான சூழல்; முதல் விக்கெட்டை எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்.. கொண்டாடித் தீர்த்த மும்பை இந்தியன்ஸ்..!
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தியதை அந்த அணி நிர்வாகம் கொண்டாடியுள்ளது.
IPL 2023: ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணி தொடங்கப்பட்டபோது அந்த அணியை வழி நடத்தியவர் கிரிக்கெட் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கர். ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவர் மும்பை அணியின் மெண்டாராக இருந்து வருகிறார். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 30 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராவார். பந்து வீச்சு ஆல் - ரவுண்டரான இவர் மும்பை வான்கடேவில் கடந்த 16ஆம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் இரண்டு ஓவர்களை வீசிய இவர் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். ஆனால் இந்த போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. மேலும் அந்த போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஜுன் தெண்டுல்கர் அறிமுகமானதற்கே சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 192 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. பவர்ப்ளேவில் இரண்டு ஓவர்கள் வீசிய அர்ஜுன் டெண்டுல்கரிடம் பந்து கொடுக்கப்பட்டது. இறுதி ஓவரில் ஐந்து பந்துகள் மட்டுமே வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து புவனேஷ்குமாரின் விக்கெட்டை வீழ்த்தினார். இது அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் ஐபிஎல் விக்கெட் ஆகும். மேலும் இந்த போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் மும்பை அணி வீரர்கள் மைதானத்தில் வெற்றியுடன் இணைந்து இதனையும் கொண்டாடினர். இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் விக்கெட்டை கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோவை தங்களது சமூகவலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர். மேலும், அர்ஜுன் டெண்டுல்கரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவரது பேட்டிங் எப்படி இருக்கும் என வர்ணணையாளார்கள் போட்டியின்போது பேசி வருகின்றனர்.