IPL 2023: இந்த வாரம் சாதனை வாரம்.. ஐபிஎல்லில் புது புது சாதனை படைக்க இருக்கு வீரர்கள்.. யார் யார் அவர்கள்?
இந்த வாரம் ஐபிஎல் தொடரில் எந்தெந்த வீரர்கள் என்ன என்ன சாதனை படைக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தனை நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வாரம் எந்தெந்த வீரர்கள் என்ன என்ன சாதனை படைக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
டிரெண்ட் போல்ட்:
இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கும் டிரென்ட் போல்ட் ஐபிஎல் தொடரில் இதுவரை 98 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்களை எடுத்தால் அதிவேகமாக 100 விக்கெட்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை படைப்பார். டிரென்ட் போல்ட் ஐபிஎல்லில் 82 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த பட்டியலில் ககிசோ ரபாடா 64 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக லசித் மலிங்கா இரண்டாவது இடத்தில் உள்ளார். லசித் மலிங்கா 70 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார்.
விராட் கோலி:
ஐபிஎல் தொடரில் விராட் கோலி 7000 ரன்களை எட்ட இன்னும் 156 ரன்கள் மட்டுமே உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார். இந்த வாரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக களமிறங்குகிறது. இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் விராட் கோலி படைப்பார்.
ஜோஸ் பட்லர்:
கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளில் 6 முறை சதம் கடந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் கிறிஸ் கெய்லின் சாதனைக்கு ஒரு சதம் மட்டுமே உள்ள நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லர் 5 சதங்கள் அடித்துள்ளார். அதாவது, கிறிஸ் கெயிலுக்கு இணையாக ஜோஸ் பட்லர் இன்னும் ஒரு சதம் அடிக்க வேண்டும். இதே வரிசையில் கோலியும் 5 சதங்களுடன் இருக்கிறார்.
ஷிகர் தவான்:
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் 6476 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தவான் 6,500 ரன்களை கடக்க 24 ரன்கள் மட்டுமே உள்ளது. இதை வருகின்ற போட்டியில் அடித்தால் ஐபிஎல்லில் 6500 ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆவார். விராட் கோலி 6,844 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 210 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 127 ஸ்டிரைக் ரேட்டில் 6476 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா:
ஐபிஎல் தொடரில் 250 சிக்சர்களை அடிக்கும் வாய்ப்பு ரோஹித் சர்மாவுக்கு உள்ளது. ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா இதுவரை 246 சிக்சர்களை அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக ஏபி டி வில்லியர்ஸ் 251 சிக்சர்களை அடித்துள்ளார். வருகின்ற போட்டிகளில் ரோகித் 6 சிக்ஸர்களை அடித்தால் இரண்டாம் இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.