David Warner In IPL: ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய ஜாம்பவான்களால் கூட இது முடியல; வார்னர் செய்த சம்பவம்..!
David Warner In IPL: ஐபிஎல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ப்ளேயர்களால் கூட செய்ய முடியாத சாதனையை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டி என்றாலே கோப்பையை மட்டும் மையமாக நடக்கும் போட்டி இல்லை. கோப்பை தான் அனைத்து அணிகளுக்கும் பிரதானமான இலக்காக இருந்தாலும், தொடரில் அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்குவது மற்றும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் நபருக்கு ஊதா நிற தொப்பியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வகையில் வீரர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக பிசிசிஐ நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இப்படி தொடருக்கு தொடர் அடையாளப்படுத்தப்படும் சாதனைகள் ஒரு புறம் இருக்க, ஒரு வீரர் ஏதோவொரு சீசன் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, ஏதாவது ஒரு சீசனில் வெளியேறி விடுவார். இப்படியான வீரர்கள் இடைப்பட்ட தொடரில் தங்களது திறமையால் படைக்கும் சாதனைகள் பல உள்ளன. அதிலும், இந்திய வீரர்களை விடவும், வெளிநாட்டு வீரர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், ஐபிஎல் போட்டி விதிமுறைகளின் படி, ஒரு அணி 4 வெளிநாட்டு வீரருடன் தான் களமிறங்க முடியும். அப்படி இருக்கும் போது, தனக்கு கிடைக்கும் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி, அணிக்கு தான் மிகவும் முக்கியம் மற்றும் தன்னால் அணி பலமாக இருக்கிறது என்கின்ற உணர்வை அணி நிர்வாகத்திற்கும் ஏற்படுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விதிமுறைகள் இப்படி இருக்கும் போது, ஐபிஎல் தொடரில் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு வீரரும் படைக்காத சாதனையை தற்போதைய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் வார்னர் படைத்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கி தற்போது வரை விளையாடி வரும் டேவிட் வார்னர், நேற்று (ஏப்ரல்/11/2023) நடந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டி வரை 604 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இதுவரை வேறு எந்த வெளிநாட்டு வீரரும் 600 பவுண்டரிகளுக்கு மேல் அடித்தது இல்லை. 2009 முதல் 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வருடங்களில் 2018ஆ ஆண்டு மட்டும் அவர் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இவரது தலைமையில் 2016ஆம் ஆண்டு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. அந்த ஆண்டு மட்டும் இவர் 88 பவுண்டரிகளை விளாசியுள்ளார். அதேபோல் இவர் அறிமுகமான 2009ஆம் ஆண்டு தான் இவர் மிகக் குறைந்த பவுண்டரிகளை விளைசியுள்ளார். இவர் அந்த தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 16 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக வேறு யாராவது அதிக பவுண்டரிகளை விளாசியவர் இருக்கிறார்களா என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை. அதாவது, கிரிஸ் கெயில் 405 பவுண்டரிகளுடனும், வாட்சன் 376 பவுண்டரிகளுடனும் உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே தற்போது ஐபிஎல் தொடர் விளையாடுவது இல்லை. பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ் மட்டும் 338 பவுண்டரிகளுடன் விளையாடி வருகிறார்.