IPL 2022, LSG vs DC: சரவெடியாய் தொடங்கி புஷ்வானமாகிய டெல்லி..! லக்னோவிற்கு 150 ரன்கள் இலக்கு..!
LSG vs DC, 1 Innings Highlight: லக்னோவிற்கு எதிராக பேட் செய்த டெல்லி அணி 149 ரன்கள் குவித்துள்ளது. இதனால், லக்னோவிற்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லி வீரர் பிரித்விஷா தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார்.
ஆவேஷ்கான் வீசிய 3 வது ஓவரிலே ஹாட்ரிக பவுண்டரியை பிரித்விஷா விளாசினார். பிரித்விஷாவின் அதிரடியால் டெல்லி 5.4 ஓவர்களில் 50 ரன்களை கடந்துள்ளது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பிரித்விஷா 30 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடி காட்டிய பிரித்விஷா 34 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் கிருஷ்ணப்பா கவுதம் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டேவிட் வார்னர் 4 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி ஸ்கோர் குறையத் தொடங்கியது. 10 ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிரடி வீரர் ரோவ்மென் பாவெலும் 3 ரன்களில் பிஷ்னோய் சுழலில் போல்டாகி வெளியேறினார். இதனால், 74 ரன்களுக்கு டெல்லி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, டெல்லி கேப்டன் ரிஷப் பண்டும், சர்பாஸ் கானும் அணியை சரிவில் இருந்து மீட்க பொறுப்புடன் ஆடினர். ஆனாலும், லக்னோ பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியதால் இருவராலும் ரன்களை சேர்க்க முடியவில்லை. 15 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே டெல்லி எடுத்தது.
15வது ஓவருக்கு பிறகு ரிஷப் பண்ட் அதிரடியில் இறங்கினார். இதனால், டெல்லி ஸ்கோர் மீண்டும் மளமளவென உயரத்தொடங்கியது. கடைசியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது, கடைசி 2 ஓவர்களை லக்னோ அணி சிறப்பாக வீசியது. ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரிஷப் பண்ட் 36 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்களுடனும், சர்பாஸ் 28 பந்தில் 3 பவுண்டரியுடன் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்