Suresh Raina: மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ரெய்னா.. புதிய திட்டம் இதுதான்.. !
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக அனைத்து அணியின் வீரர்களும் மும்பையிலுள்ள நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் தனித்தனியாக ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல் ஐபிஎல் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் ஐபிஎல் முதல் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை வீரராக சுரேஷ் ரெய்னா களமிறங்கி வந்தார். ஐபிஎல் தொடரில் இவருடைய சிறப்பான செயல்பாட்டை பார்த்து இவருக்கு மிஸ்டர் ஐபிஎல் என்ற பட்டமும் கிடைத்தது.
எனினும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. அதன்பின்னர் குஜராத் அணி காயம் காரணமாக மாற்று வீரரை தேடி கொண்டிருந்த போது அதற்கு சுரேஷ் ரெய்னா எடுக்கப்படுவார் என்று பலரும் ட்விட்டரில் கருத்து கூறி வந்தனர். எனினும் ரெய்னாவை அந்த அணி எடுக்கவில்லை. ஆஃப்கானிஸ்தான் வீரர் ரமனுல்லா குர்பாஜை அந்த அணி எடுத்தது. இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் ரெய்னா விளையாட மாட்டார் என்று அவருடைய ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்து வந்தனர்.
இந்தச் சூழலில் அவர் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்
க்ரூப் விவரம்:
க்ரூப் ஏ | க்ரூப் பி |
மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் |
ராஜஸ்தான் ராயல்ஸ் | பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் |
டெல்லி கேப்பிடல்ஸ் | பஞ்சாப் கிங்ஸ் |
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் | குஜராத் டைட்டன்ஸ் |
இந்த குரூப் சுற்றுகளுக்கு பிறகு ப்ளே ஆஃப் சுற்றுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்