PBKS vs RR Match Preview : பஞ்சாப் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல் : ஐ.பி.எல் வரலாறு சொல்வது என்ன?
ஐ.பி.எல். தொடரில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும், 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் பாதியின் 32-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும், புள்ளிப்பட்டியலில்7வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும்.
ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் பஞ்சாப் அணி 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இரு அணிகளும் இதற்கு முன்பு துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியதில்லை.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பஞ்சாப் அணி 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலக்கை விரட்டிப் பிடிக்கும்போது 6 போட்டிகளில் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிக ரன்களை குவித்தவர் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். அவர் 525 ரன்களை பஞ்சாப் அணிக்கு எதிராக குவித்துள்ளார். அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அதிக ரன்களை குவித்துள்ளார். அவர் 441 ரன்களை இதுவரை சேர்த்துள்ளார். ஒரு போட்டியில் தனி நபர் அதிகபட்சமாக பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷான் மார்ஷ் 115 ரன்களை எடுத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பஞ்சாப் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 119 ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரை ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிகபட்சமாக பஞ்சாப் வீரர் பியூஷ் சாவ்லா 14 விக்கெட்டுகளை இதுவரை எடுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சித்தார்த் திரிவேதி 11 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்துள்ளார். ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்ச விக்கெட்டாக கெவோன் கூப்பர் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரியான் ஹாரிஸ் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், அதிரடி வீரர் கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, முகமது ஷமி, நாதன் எல்லீஸ், மார்க்ரம், முருகன் அஸ்வின், ஷாரூக்கான் போன்ற நம்பிக்கை தரும் வீரர்கள் உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ரியான் பராக், சிவம் துபே, ராகுல் திவேதியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சக்காரியா, டேவிட் மில்லர் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.