MI vs PBKS: ’திரும்ப வந்துட்டனு சொல்லு’ - பஞ்சாப்பை அடித்து தோல்விகளுக்கு ‘எண்ட்’ போட்ட மும்பை
இந்த சீசனின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து 3 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது மும்பை.
ஐ.பி.எல். தொடரின் 41-வது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்குநேர் மோதின. இரு அணிகளும் இது வாழ்வா? சாவா? போட்டி என்பதால், வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்கின. டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
குறைவான ஸ்கோர் என்பதால், அதிரடியான பேட்டிங் லைன் -அப் வைத்திருக்கும் மும்பை அணி, போட்டியை எளிதில் வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், டஃப் கொடுத்த பஞ்சாப் அணி பெளலர்கள் போட்டியின் 4வது ஓவரிலேயே ரோஹித் ஷர்மா (8), சூர்யகுமார் யாதவ் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் வேகத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டனர். ரவி பிஷ்னாயின் இந்த ஓவர் மும்பையிடம் இருந்த வெற்றி வாய்ப்பை பஞ்சாப் பக்கம் இழுத்தது.
ஆனால், டி-காக் (27) ஓரளவு ரன் சேர்க்க, சவுரப் திவாரி இன்றைய போட்டியில் மும்பை வெற்றி பெற முக்கிய காரணமானார். 45 ரன்கள் எடுத்த அவர், மும்பை அணி 92 ரன்கள் எடுக்கும் வரை களத்தில் நின்றார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்டிக், பொல்லார்டு வழக்கம் போல அதிரடி காட்டி போட்டியை முடித்து வைத்தனர். கடைசி ஓவர்களில், பஞ்சாப் அணியின் சொதப்பல் ஃபீல்டிங் மும்பை அணியின் வெற்றிக்கு சாதகமானது. 19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது மும்பை அணி. இந்த சீசனின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து 3 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது மும்பை. இதன் மூலம், இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.
A 6⃣-wicket victory! 👏 👏@mipaltan return to winning ways as they beat #PBKS in Abu Dhabi. 👍 👍 #VIVOIPL #MIvPBKS
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Scorecard 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/lCN63QoI30
முதல் இன்னிங்ஸ் ரீகேப்
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணிக்கு ராகுலுடன், மந்தீப் சிங் ஓப்பனிங் களமிறங்கினார். பவர்ப்ளேவின் கடைசி ஓவர் வரை நின்ற இந்த இணையை பிரித்தார் க்ருணால் பாண்டியா. மந்தீப் சிங் வெளியேறியவுடன், கெய்ல் களமிறங்கினார்.
ராகுல் - கெய்ல் இணை ரன் சேர்க்கும் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டபோது, ஒரே ஓவரில் போட்டியின் போக்கை மாற்றினார் பொல்லார்டு. அவர் வீசிய 7வது ஓவரின்போது முதலில் கெய்ல் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து ராகுலும் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பூரனும் 2 ரன்களுக்கு வெளியேற, பஞ்சாப் அணி ரன் சேர்க்க திணறியது. இந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுத்த, பொல்லார்டு டி-20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
மார்க்கரம் - ஹுடா இணை களத்தில் நின்று நிதானமாக ரன் சேர்த்தது. 50 ரன்களுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள், பஞ்சாப் அணியின் ஸ்கோரை 100-ஐ தொட வைத்தனர். கடைசி 5 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், மார்க்கரம் - ஹூடா இணை களத்தில் இருந்திருந்தால் ஸ்கோர் 150-ஐ எட்டி இருக்கும். ஆனால், ராகுல் சஹார் வீசிய 16-வது ஓவரில் 42 ரன்களுக்கு மார்க்கரம் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹர்ப்ரீத் பிரர் களமிறங்கினார். மார்க்கரமை வெளியேற்றியது போல, பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஹூடாவும் வெளியேறினார். இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, 135 ரன்கள் எடுத்தது.