IPL 2024: கடந்த 46 லீக்: டாப்பில் இருக்கும் கோலி, பும்ரா, சாம்சன்; யார் எதில் பெஸ்ட்?
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
46 லீக் போட்டிகள் வரை இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் மற்றும் அதிக சதம், அரைசதம் அடித்த வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
அதிக ரன்கள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி பேட்டர் விராட் கோலி. இவர் தான் இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கிறார். அதாவது மொத்தம் 10 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 500 ரன்களை குவித்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடி 447 ரன்களை குவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சன் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதி ல் 418 ரன்கள் குவித்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள்:
இந்த ஐ.பி.எல் சீசனில் இதுவரை நடைபெற்ற 46 லீக் போட்டிகளை பொறுத்தவரை அதிக விக்கெட் எடுத்த வீரராக இருப்பவர் ஜஸ்ப்ரித் பும்ரா. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் 9 இன்னிங்ஸ்களில் 14 விக்கெட்டைகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் முஸ்தாபிசுர் ரஹ்மான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளரான இவர் 8 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஹர்ஷல் படேல். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் 9 லீக் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிக சிக்ஸர்கள்:
அதிக சிக்ஸர்கள் குவித்த வீரராக இருப்பவர் ஹென்ரிச் கிளாசென். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஹென்ரிச் கிளாசென் 9 போட்டிகள் விளையாடி உள்ளார். இதில் மட்டும் சுமார் 28 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் இருப்பவர் அபிஷேக் சர்மா.
இவரும் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 27 சிக்ஸ்ர்களை பறக்கவிட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷிவம் துபே உள்ளார். மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி உள்ள துபே 26 சிக்ஸ்ரக்ள் விளாசி இருக்கிறார்.
அதிக சதம் மற்றும் அரைசதம்:
அதிக சதம் விளாசிய வீரராக இருப்பவர் ஜோஸ் பட்லர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் பட்லர் 8 போட்டிகளில் விளையாடி 2 சதங்களை விளாசி உள்ளார். அதேபோல் அதிக அரைசதம் குவித்த வீரராக 10 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி மற்றும் 9 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இருக்கின்றனர். இருவரும் தலா 4 அரைசதங்களை விளாசி உள்ளனர்.
முன்னதாக இன்று (ஏப்ரல் 29) கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 47வது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.