GT vs MI IPL 2023: மும்பைக்கு எதிராக முதன்முறையாக வெற்றி பெறுமா குஜராத்.? பலம், பலவீனம் என்னென்ன..?
ஐ.பி.எல். தொடரில் மும்பை மற்றும் குஜராத் அணிகளின் பலம், பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐ.பி.எல். தொடரில் மும்பை மற்றும் குஜராத் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மும்பை - குஜராத் மோதல்:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முன்னதாக இந்த இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
நேருக்கு நேர்:
குஜராத் அணி கடந்தாண்டு தான் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான நிலையில், மும்பை அணியுடன் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளது. அதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று மும்பை அணியை பழிவாங்க முனைப்பு காட்டி வருகிறது.
தனிநபர் சாதனைகள்:
குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த மும்பை வீரர்: இஷான் கிஷன், 45 ரன்கள்
மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த குஜராத் வீரர்: விரிதிமான் சாஹா, 55 ரன்கள்
குஜராத் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த மும்பை வீரர்: முருகன் அஷ்வின், 2 விக்கெட்டுகள்
மும்பை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த குஜராத் வீரர்: ரஷித் கான், 2 விக்கெட்கள்
மும்பை அணி பலம் பலவீனம்:
ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை அணி நடப்பு தொடரை சற்று தடுமாற்றத்துடனேயே தொடங்கியுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான், கேமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகிய இளம் வீரர்களும் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால், ஆர்ச்சர், பெஹ்ரெண்ட்ரோஃப் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இதுவரை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் ரன்களை வாரி வழங்கி வருவது மும்பை அணியின் பெரிய தலைவலியாக மாறி உள்ளது. பியூஷ் சாவ்லா மட்டுமே பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகிறார்.
குஜராத் அணி பலம் பலவீனம்:
நடப்பு சாம்பியனான குஜராத் அணி இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது. கடந்த சீசனை போன்றே அதிரடியாக தொடங்கினாலும், கடந்த சில போட்டிகளில் அந்த அணி தடுமாறி உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரியான கலவையில் அமைந்து இருந்தாலும், இலக்கை துரத்தும் போது திறம்ப செயல்படும் குஜராத் அணியால், முதலில் பேட்டிங் செய்யும்போது பெரிதாக சோபிக்க முடிவதில்லை. இது எதிரணிகளுக்கு சாதகமாக கருதப்படுகிறது.