Whatsapp Block And Report: வாட்ஸ் - அப் செயலியில் புதிய பிரச்னை.. ஹலோ இந்தியாவா?.. குவியும் வெளிநாட்டு அழைப்புகள்
இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்கு சம்மந்தமே இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வருவது தொடர்பாக மெட்டா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்கு சம்மந்தமே இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வருவது தொடர்பாக மெட்டா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வாட்ஸ் - அப் செயலி:
மெட்டா குழுமத்திற்கு சொந்தமான வாட்ஸ் - அப் செயலி உலகம் முழுவதும் மாதத்திற்கு 200 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. குறுந்தகவல்களை அனுப்புவதில் முதன்மையான செயலியாகவும் திகழ்கிறது. பொதுமக்களிடையே இத்தையை பெரும் பயன்பாட்டை கொண்டிருப்பதே, அதில் பல்வேறு தவறுகள் நடைபெறுவதற்கும் வழிவகுக்கிறது. அந்த வகையில் தான் பயனாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து புதிய பிரச்னை ஒன்று வாட்ஸ்- அப் செயலியில் உருவாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள்:
குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்வது முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தற்போது வாட்ஸ்-அப் செயலியில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களையும் மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது சம்மந்தமே இல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களுக்கு அழைப்பு வருகிறது. குறிப்பாக மலேசியா, கென்யா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து இந்த அழைப்புகள் வருகின்றன. ஆனால், இந்த அழைப்புகளை மேற்கொள்வது யார், அவர்களுக்கு நோக்கம் என்ன என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை.
குவிந்த புகார்கள்:
அநாவசிய அழைப்புகள் தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் போன்றவற்றை பயனாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கவலைகளையும், புகாரையும் தெரிவித்து வருகின்றனர். இது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்கள் சந்தேகத்திற்குரிய கணக்குகளை உடனடியாக பிளாக் செய்து, புகாரளிக்கும்படி அறிவுறுத்தியதோடு, அப்போது தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் மெட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் - அப் விளக்கம்:
இதுதொடர்பாக மெட்டா குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தெரியாத எண்களில் இருந்து வரும் வெளிநாட்டு/ உள்நாட்டு அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் . பயனர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத அழைப்புகளை ப்ளாக் செய்து ரிப்போர்ட் செய்யுங்கள். அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம். இதற்காக் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் மற்றும் செயல்முறைகளில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பிளாக் செய்வது:
- வாட்ஸ்அப்பில் ஒரு எண்ணை பிளாக் செய்ய, பயனாளர்கள் முதலில் குறிப்பிட்ட எண்ணிற்கான சாட் - பாக்ஸை திறக்க வேண்டும்
- கால் ஆப்ஷனிற்கு அருகே உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்
- பிளாக் எனும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
பிளாக் செய்யப்பட்ட தொடர்புகளால் இனி உங்களை அழைக்கவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியாது. உங்களுடைய லாஸ்ட் சீன், ஆன்லைனில் ஸ்டேடஸ்க்ள் மற்றும் உங்கள் சுயவிவரப் புகைப்படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என எதையுமே பிளாக் செய்த நபரால் இனி பார்க்க முடியாது.