![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs AUS Final: ஏன்ப்பா இப்படி! 2023ம் ஆண்டில் மட்டும் இரண்டு முறை.. ஐசிசி பட்டத்தை இந்தியாவிடம் பறித்த டிராவிஸ் ஹெட்..!
டிராவிஸ் ஹெட் சதம் அடித்து ஐசிசி இறுதிப்போட்டியில் பட்டத்தை இந்தியாவிடம் இருந்து பறிப்பது இது முதல் முறையல்ல. 2023ம் ஆண்டில் மட்டும் இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.
![IND vs AUS Final: ஏன்ப்பா இப்படி! 2023ம் ஆண்டில் மட்டும் இரண்டு முறை.. ஐசிசி பட்டத்தை இந்தியாவிடம் பறித்த டிராவிஸ் ஹெட்..! world cup 2023 final ind vs aus australias travis head hit century second time against india in icc final in 2023 IND vs AUS Final: ஏன்ப்பா இப்படி! 2023ம் ஆண்டில் மட்டும் இரண்டு முறை.. ஐசிசி பட்டத்தை இந்தியாவிடம் பறித்த டிராவிஸ் ஹெட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/cb616695de2a79875c2b86e42e1c79851700463526836571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகக் கோப்பை 2023ல் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக ஒருநாள் உலகப் பட்டத்தை வெல்வதற்கு டிராவிஸ் ஹெட் முக்கிய பங்களிப்பைச் செய்தார். இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இடது கை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றிக் கோட்டை ஏறி பட்டத்தை வெல்ல முக்கியப் பங்காற்றினார். ஹெட் இந்த இன்னிங்ஸில் 120 பந்துகளை எதிர்கொண்டு 137 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி எளிதானது.
டிராவிஸ் ஹெட் சதம் அடித்து ஐசிசி இறுதிப்போட்டியில் பட்டத்தை இந்தியாவிடம் இருந்து பறிப்பது இது முதல் முறையல்ல. 2023ம் ஆண்டில் மட்டும் இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.
இதே ஆண்டில், அதாவது ஜூன் 2023 இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், டிராவிஸ் ஹெட்டின் சதம் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஆட்டநாயகன்:
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் கூட, ஹெட் தனது அற்புதமான இன்னிங்ஸிற்காக ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 174 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 163 ரன்கள் எடுத்தார்.
உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி:
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 6.6 ஓவர்களில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் இதன்பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுசேன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் எடுத்தார். ஹெட் தனது சதத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு 6வது உலகக் கோப்பையை பெற்று கொடுத்தார். இந்த அற்புதமான இன்னிங்ஸிற்காக ஹெட் 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' என்ற பட்டத்தையும் பெற்றார்.
யார் இந்த டிராவிஸ் ஹெட்..?
டிராவிஸ் ஹெட் இதுவரை 10 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி 205 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 2016 மற்றும் 2017 ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் விளையாடினார். இதன்பிறகு, வேறு எந்த ஐபிஎல் ஒப்பந்தத்திலும் பங்கேற்காமல், தனது நாடான ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார். இதுவரை, அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 42 டெஸ்ட், 64 ஒருநாள் மற்றும் 20 டி2 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 45.37 சராசரியில் 6 சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள் உள்பட 2904 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 175 ரன்கள் ஆகும்.
இது தவிர, ஒருநாள் போட்டியில் 61 இன்னிங்ஸ்களில், ஹெட் 42.73 சராசரியில் 5 சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள் உள்பட 2393 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், சர்வதேச டி20யில் 19 இன்னிங்ஸ்களில், அவர் 28.75 சராசரி மற்றும் 140.67 ஸ்ட்ரைக் ரேட்டில் 1 அரைசதத்துடன் 460 ரன்கள் எடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)