Virat Kohli Retire: கிரிக்கெட்டின் அசுரன்டா.. மறக்கவே முடியாத கோலியின் டெஸ்ட் அபார சதங்கள் இதுதான்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில் கோலியின் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களை கீழே காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக உலா வரும் விராட் கோலி கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அமைதி மனப்பாங்கிலே ஆடி வந்த இந்திய அணியின் மனநிலையை ஆக்ரோஷ மனப்பாங்கிற்கும், வெற்றிக்காக போராடும் குணாதிசயம் கொண்ட அணியாகவும் மாற்றியதில் விராட் கோலியின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது ஆகும்.
விராட் கோலியின் தலைசிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்று ஐசிசி குறிப்பிட்டுள்ளதை கீழே காணலாம்.
1. 119 ரன்கள், 96 ரன்கள் - ஜோகன்ஸ்பரக்
இந்தியாவிற்கு எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான மைதானமாக இருப்பது தென்னாப்பிரிக்கா ஆகும். முதன்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி அந்த தொடரில் தன்னுடைய முதல் டெஸ்ட்டிலே சதம் விளாசி அசத்தினார்.
தவான் 13 ரன்னிலும், முரளி விஜய் 6 ரன்னிலும் அவுட்டாகிய நிலையில் 16வது ஓவரில் உள்ளே வந்த விராட் கோலி புஜாராவுடன் இணைந்து அபாரமாக ஆடினார். அபாரமாக ஆடிய விராட் கோலி சதம் விளாசி 119 ரன்கள் எடுத்தார். அவரது அபாரமான சதத்தால் இந்தியா 280 ரன்களை எடுத்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 244 ரன்கள் எடுத்து அவுட்டாகிய நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் ஷிகர் தவான் 15 ரன்னிலும், முரளி விஜய் 39 ரன்னிலும் அவுட்டாக மீண்டும் புஜாராவுடன் கூட்டணி சேர்ந்த விராட் கோலி மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். சதத்தின் அருகில் சென்று சதத்தை தவறவிட்டார். 96 ரன்கள் எடுத்து அவுட்டானார். புஜாராவின் 153 ரன்கள், கோலியின் 96 ரன்கள் இந்திய அணி 421 ரன்களை எடுக்க உதவியது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 450 ரன்கள் எடுக்க ஆட்டம் டிராவானது. அந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் மிரட்டிய விராட் கோலி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
2. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 115 ரன்கள் மற்றும் 141 ரன்கள்:
இந்தியாவிற்கு எப்போதும் சவாலான மைதானங்களில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் வார்னர், கிளார்க், ஸ்மித் சதத்தால் 517 ரன்களை ஆஸ்திரேலியா விளாச, முரளி விஜய், தவான் 111 ரன்களுக்குள் அவுட்டாக புஜாராவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி தனி ஆளாக போராடினார். சிறப்பாக ஆடிய விராட் கோலி தான் ஒரு போராளி என்பதை நிரூபிக்கும் விதமாக ஆடி சதம் விளாசினார். 30வது ஓவரில் உள்ளே வந்த விராட் கோலி 95வது ஓவரில்தான் அவுட்டானார். அவர் முதல் இன்னிங்சில் 115 ரனகள் எடுத்து அவுட்டானார்.
ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு நிர்ணயித்த 363 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு தவான், புஜாரா ஏமாற்றம் தர மீண்டும் நம்பிக்கை தந்தார் விராட் கோலி. முரளி விஜய் ஒரு முனையில் சிறப்பாக ஆட அபாரமாக ஆடிய கோலி சதம் விளாசினார். வெற்றியின் அருகில் வந்தபோது விராட் கோலி அவுட்டானார். 304 ரன்களை இந்தியா எடுத்தபோது கோலி 141 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்த 3 விக்கெட்டுகள் 11 ரன்களுக்குள் வீழ்ந்தது. ஆனாலும், அந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தினார் விராட் கோலி.
3. இங்கிலாந்திற்கு எதிராக 235 ரன்கள்:
விராட் கோலியின் அபாரமான ஆட்டத்திறனை கொண்டு அவரிடம் கேப்டன்சி வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டு மும்பையில் நடந்த 4வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு இங்கிலாந்து அவுட்டாக கே.எல்.ராகுல் 24 ரன்கள், புஜாரா 47 ரன்களுக்கு அவுட்டாக முரளி விஜய்யுடன் சேர்ந்த கோலி அசத்தினார். 88வது ஓவரில் உள்ளே வந்த கோலி முரளி விஜய் சதம் கண்ட பிறகு தானும் சதம் விளாசினார். சதத்தை விளாசிய கோலி இரட்டை சதத்தையும் விளாசினார். கடைசியில் 235 ரன்கள் விளாசி 9வது விக்கெட்டாக அவுட்டானார். சுமார் 90 ஓவர்கள் வரை அவர் களத்தில் நின்றார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
4. இங்கிலாந்திற்கு எதிராக 149 ரன்கள் ( எட்ஜ்பஸ்டன்)
இந்தியாவிற்கு எப்போதும் சிம்மசொப்பனமாக இருக்கும் மைதானத்தில் இங்கிலாந்தும் ஒன்றாகும். எட்ஜ்பஸ்டனில் நடந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் விஜய் 20 ரன்னிலும், ஷிகர் தவான் 26 ரன்னிலும், ராகுல் 4 ரன்னிலும் அவுட்டாக இந்திய வீரர்கள் சொதப்ப தனி ஆளாக போராடிய விராட் கோலி 149 ரன்களை விளாசினார். அந்த போட்டியில் விராட் கோலிக்கு அடுத்த படியாக இந்தியாவிற்காக அதிக ரன்களை எடுத்த ஹர்திக் பாண்ட்யாவின் ரன்கள் 22 ஆகும். 16வது ஓவரில் உள்ளே வந்த விராட் கோலி கடைசி விக்கெட்டாக 76வது ஓவரில் அவுட்டானார். அந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் இங்கிலாந்து ஊடகங்கள் விராட் கோலியின் இந்த இன்னிங்சை புகழ்ந்து எழுதின.
5. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 153 ரன்கள் (செஞ்சுரியன்)
2018ம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 335 ரன்களுக்கு அவுட்டாக அடுத்து ஆடிய இந்திய அணிக்காக ராகுல் 10 ரன்கள், புஜாரா டக் அவுட்டாக, ரோகித் சர்மா 10 ரன்களுக்கு அவுட்டாக தனி ஆளாக மீண்டும் விராட் கோலி போராடினார். தனி ஆளாக போராடிய விராட் கோலி அரைசதம் கடந்து சதம் விளாசினார். கடைசியில் அவர் 153 ரன்களை குவிக்க இந்தியா 307 ரன்களுக்கு அவுட்டானது. அந்த போட்டியில் கோலிக்கு அடுத்தபடியாக முரளி விஜய் 46 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம்.
6. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 254 ரன்கள்:
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன்கள் 254 ரன்கள் ஆகும். புனேவில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு அவுட்டாக, புஜாரா 58 ரன்களுக்கு அவுட்டாக விராட் கோலி பட்டையை கிளப்பினார். அபாரமாக ஆடிய விராட் கோலி சதத்தையும் கடந்து இரட்டை சதம் விளாசினார். அபாரமாக ஆடிய விராட் கோலி 254 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். அந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி இந்திய அணிக்காக பல நெருக்கடியான சூழலில் பல நெருக்கடியான மைதானத்தில் ஆடி வெற்றியைத் தேடித் தந்துள்ளார். ஜான்சன், ஆண்டர்சன், ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்டூவர்ட் பிராட், நாதன் லயன், ஹெராத், மலிங்கா, பீட்டர் சிடில் உள்ளிட்ட ஜாம்பவான்களுக்கு எதிராக பேட் செய்துள்ளார்.




















