Virat Kohli: ஒருத்தனையும் விடல.. ஆஸ்திரேலியா முதல் இலங்கை வரை! கோலி யாருக்கு எதிராக எத்தனை ரன்கள்?
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி எந்த அணிக்கு எதிராக எத்தனை ரன்களை எடுத்துள்ளார் என்பதை கீழே விரிவாக காணலாம்.

உலக கிரிக்கெட்டின் அரசனாக திகழ்பவர் விராட் கோலி. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், விராட் கோலி ஒவ்வொரு அணிக்கும் எதிராக டெஸ்ட் போட்டிகளில் எத்தனை ரன்களை அடித்துள்ளார்? என்பதை கீழே காணலாம்.
ஆஸ்திரேலியா:
விராட் கோலிக்கு மிகவும் பிடித்தமான அணிகளில் ஆஸ்திரேலியா எப்போதும் முதன்மையானது ஆகும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 30 டெஸ்ட் போட்டிகளில் 53 இன்னிங்சில் ஆடி 2 ஆயிரத்து 232 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 9 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும். தான் ஆடிய டெஸ்ட் அணிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும்தான் விராட் கோலி இரட்டை சதம் விளாசவில்லை. அதிகபட்சமாக 186 ரன்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு எதிராக 43.76 சராசரி வைத்துள்ளார்.
வங்கதேசம்:
வங்கதேசம் அணிக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்சில் ஆடி 2 சதங்கள், 1 இரட்டை சதத்துடன் 536 ரன்கள் விளாசியுள்ளார். 48.73 ரன்களை சராசரியாக வைத்துள்ளார்.
இங்கிலாந்து:
இங்கிலாந்து அணிக்கும் விராட் கோலி எப்போதும் சவால் மிகுந்த பேட்ஸ்மேனாகவே உலா வந்துள்ளார். அவர் இங்கிலாந்திற்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகளில் 50 இன்னிங்சில் ஆடி 5 சதங்கள், 9 அரைசதங்களுடன் 1991 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 235 ரன்களை இங்கிலாந்திற்கு எதிராக விளாசியுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 42.36 வைத்துள்ளார்.
நியூசிலாந்து:
சவாலான அணிகளில் ஒன்றான நியூசிலாந்திற்கு எதிராகவும் விராட் கோலி தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். அவர்களுடன் 14 டெஸ்ட் போட்டிகளில் 27 இன்னிங்சில் ஆடி 959 ரன்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு எதிராக 3 சதங்கள், 4 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 211 ரன்கள் எடுத்துள்ளார். 38.36 பேட்டிங் சராசரியாக நியூசிலாந்திற்கு எதிராக வைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா:
விராட் கோலிக்கு மிகவும் பிடித்த அணிகளில் தென்னாப்பிரிக்கா முக்கியமான அணியாகும். அவர்களுக்கு எதிராக 16 டெஸ்ட் போட்டிகளில் 28 இன்னிங்சில் 3 சதங்கள், 5 அரைசதங்களுடன் 1408 ரன்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ரன்னான 254 ரன்களை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவே கோலி விளாசியுள்ளார். 54.15 பேட்டிங் சராசரியாக வைத்துள்ளார்.
இலங்கை:
இலங்கை அணிக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் 18 இன்னிங்சில் ஆடி 5 சதங்கள், 2 அரைசதங்களுடன் 1085 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 243 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 67.81 வைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 16 டெஸ்ட் போட்டிகளில் 21 இன்னிங்சில் ஆடி 1019 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 3 சதங்கள் 6 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 200 ரன்கள் விளாசியுள்ளார். சராசரியாக 48.52 ரன்களை அவர்களுக்கு எதிராக வைத்துள்ளார்.




















