Kohli Quits Test Captaincy: 2017ல் தோனி கூறியதை பின்பற்றுகிறாரா கோலி? விலகலுக்கு காரணம் என்ன?
இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதற்கு தோனி 2017ல் கூறியது காரணமாக இருக்கலாம் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நேற்று விலகியுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி விலகல் பலரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர். அவருடைய திடீர் விலகலுக்கு பலரும் பல காரணங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் 2017ஆம் ஆண்டு இந்திய கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகும் போது கூறியவற்றை சுட்டிக்காட்டி வருகின்றனர். அது கூட விராட் கோலி தற்போது இந்த முடிவை எடுக்க காரணமாக அமைந்திருக்கும் என கூறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் மூன்று ஆண்டுகள் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்து வந்தார். 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்பாக தோனி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இது தொடர்பாக பேசியிருந்தார்.
அதில், “என்னை பொறுத்தவரை ஒரு அணிக்கு பல கேப்டன்கள் இருக்கும் முறை எப்போதும் சரியாக இருக்காது. ஒரு அணிக்கு ஒருவர் தான் தலைவராக இருக்க முடியும். இந்தியாவில் ஸ்பிலிட் கேப்டன்சி எப்போதும் ஒத்துவராது. விராட் கோலி சில நாட்கள் கேப்டன் பதவியில் நன்றாக உணரவேண்டும் என்று நான் காத்திருந்தேன். ஆகவே தற்போது என்னுடைய முடிவை அறிவித்துள்ளேன். இந்த அணி மூன்று விதமான கிரிக்கெட்களிலும் சிறப்பாக விளையாடும் திறமை கொண்டது” எனக் கூறியிருந்தார்.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியது போல் இந்தியாவிற்கு ஸ்பிலிட் கேப்டன்சி சரியாக இருக்காது என்று விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அதன்பின்னர் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ நீக்கியது. இதனால் கோலி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சரித்திரம் சொல்லும் சாதனை; உன் வெற்றிக்கு நீயே இணை... இந்திய கேப்டன்சியில் கோலியின் ரெக்கார்டுகள்...