Virat Kohli: டி20, ஒருநாள் போட்டிகளுக்கு டாடா சொல்கிறாரா விராட் கோலி? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!
Virat Kohli: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளமாக திகழும் முன்னணி வீரர்களில் விராட் கோலியைத் தவிர்க்க முடியாது. இந்திய அணியில் இடம் பிடித்ததில் இருந்து இன்று வரை தனது பேட்டிங்கினால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றார். தற்போது அணியின் சீனியர் வீரராக உள்ள விராட் கோலி தற்போது அணிக்கு முக்கியமான வீரராக இருப்பதுடன் அணியில் இருந்து கொண்டே அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பணியையும் செய்யவேண்டிய இடத்தில் இருகின்றார்.
ஒருநாள், டி20யில் இருந்து ஓய்வா?
நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களும் சில விளையாட்டு செய்திகளை பிரதானமாக கொண்டு செயல்படும் ஊடகங்களும் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 யில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் எனக் கூறிவருகின்றனர். ஆனால் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் களத்தில் அவரது செயல்பாட்டினைப் பார்க்கும்போது அவர் தனது ஓய்வை விருப்பப்படும் நேரத்தில் எடுக்கலாம் என பல வீரர்களும் தெரிவித்து வந்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விராட்:
இந்நிலையில் இந்திய இளம் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றது. இதில் இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 2 போட்டுகளில் வென்று ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவி முன்னிலை வகிக்கின்றது. இதற்கடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு ஒருநாள் போட்டித் தொடர், டி20 போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் என மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட விருப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக விராட் கோலி பிசிசிஐ-க்கு கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. விராட் கோலியின் இந்த முடிவு என்பது தற்காலிகமானதா? அல்லது இதுதான் நிரந்தர முடிவா? என்பது குறித்தெல்லாம் அவரும் வரும் காலமும்தான் முடிவெடுக்கும் என பிசிசிஐ-யின் நெருங்கிய வட்டாரங்கள் பேசி வருகின்றன. குறிப்பாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அதிகம் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அடுத்த ஆண்டு வெட்ஸ் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் களமிறங்குகின்றன. ஐசிசி தொடர்களிலேயே அதிக அணிகள் களமிறங்கும் முதல் போட்டி இதுதான்.
விராட் கோலியின் இந்த முடிவு தற்காலத்திற்கான முடிவாகத்தான் இருக்கும் எனவும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவார் எனவும் பிசிசிஐ-யின் நெருங்கிய வட்டாரங்கள் நம்பிக்கையாக உள்ளனர்.




















