அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, அமெரிக்காவுக்கு எதிராக 2 டி20, 3 ஒரு நாள் போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1 டி20, 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 



இந்தநிலையில், பல்வேறு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மத்தியில் இன்று அயர்லாந்து அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நடைபெற்றது. மிக பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 


 
அதன் அடிப்படையில் அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் மோனங் பட்டேல் மற்றும் ரியான் ஸ்காட் களமிறங்கினர். போட்டியின் தொடக்கத்தில் கேப்டன் மோனங் பட்டேல் 2 ரன்களில் அவுட் ஆகி நடையைக்கட்ட, தொடர்ச்சியாக களமிறங்கிய மார்ஷல், ரித்விக் பெரேரா சொற்ப ரன்களில் வெளியேறினர். 


அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் ரியான் ஸ்காட் 8 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்கா அணி 4.2 ஓவர்களில் 16 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 50 ரன்களுக்குள் அணி எண்ணிக்கை சுருண்டு விடுமோ என்று எண்ணியபோது, சுஷாந்த் மோதானி மற்றும் குஜனநாத் சிங் அணியின் ரன் வேகத்தை மின்னல் வேகத்தில் உயர்த்தினர். 


அயர்லாந்து அணியில் பந்துவீச்சாளர்களின் பந்துகள் நாலாபுறமும் சிதற, குஜனநாத் சிங் சிக்ஸர்களை தெறிக்க விட்டார். 16 ஓவர்களில் அமெரிக்க அணியின் எண்ணிக்கை 126 ஆக இருந்தபோது, குஜனநாத் சிங் 42 பந்துகளில் 65 ரன்கள் பெற்று(3 பௌண்டரி, 5 சிக்ஸர்) பெஞ்சமின் பந்தில் ராக்கிடம் கேட்சானார். அவரை தொடர்ந்து, சுஷாந்த் மோதானி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்,  சிறப்பாக விளையாடிய மோதானி அரைசதம் கடந்து 50 ரன்களில் வெளியேற, அமெரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. 


அயர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்ட்டி 4 விக்கெட்களும், சிமி சிங் மற்றும் பெஞ்சமின் வைட் தலா 1 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். 


189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரியோ, பால் ஸ்ட்ரிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 12 ஆக இருந்தபோது கேப்டன் ஆண்ட்ரியோ 4 ரன்களில் வெளியேற,மற்றொரு தொடக்க வீரர் பால் ஸ்ட்ரிங் ஓரளவு தாக்குப்பிடித்து 31 ரன்களில் அவுட்டானார். 


பின் வரிசை வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் நடையைக்கட்ட, மறுமுனையில் தனி ஆளாக போராடிய லூனர் டக்கர் 49 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், அமெரிக்க அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


 






அமெரிக்கா அணியில் அதிகபட்சமாக சுரப், அலி கான், நிஷார்க் பட்டேல் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். ஆட்டநாயகனாக குஜனநாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண