WTC Final 2025 AUS vs SA: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், உலக கிரிக்கெட்டில் தோல்விகளையே சுமந்து வரும் தென்னாப்பிரிக்க அணியும் மோதி வருகின்றனர்.
282 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு ஆஸ்திரேலியா 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் 282 ரன்கள் என்பது வலுவான இலக்காகும். ஏனென்றால், கடைசி 3 நாட்கள் என்பது சிவப்பு பந்தில் ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு சவாலான ஒன்றாகும். ஆட்டத்தை மார்க்ரம் - ரிக்கெல்டன் தொடங்கினர். ஸ்டார்க் - ஹேசில்வுட் ஜோடி தங்களது வேகத்தால் தொடர்ந்து அச்சுறுத்தினர்.
அச்சுறுத்திய ஸ்டார்க்:
ஸ்டார்க் வேகத்தில் ரிக்கெல்டன் 6 ரன்னில் அவுட்டாக, அடுத்து மார்க்ரமிற்கு ஒத்துழைப்பு தந்த முல்டர் களத்தில் சற்று நேரம் நீடித்தார். முதல் இன்னிங்சில் டக் அவுட்டான மார்க்ரம் இந்த முறை களத்தில் நங்கூரமிடத் தொடங்கினார். இருவரும் இணைந்து ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். மார்க்ரமிற்கு ஒத்துழைப்பு தந்த முல்டர் 50 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கு அவுட்டாக, 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது.
காப்பாற்றிய மார்க்ரம் - பவுமா:
பின்னர், ஜோடி சேர்ந்த மார்க்ரம் - கேப்டன் பவுமா ஜோடி ஆஸ்திரேலியாவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். களத்தில் பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த இவர்கள் இருவரும் முதலில் நிதானம் காட்டினர். கேப்டன் கம்மின்ஸ் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன், வெப்ஸ்டர், டிராவிஸ் ஹெட் ஆகியோருடன் தானும் பந்துவீசினார்.
சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அபாரமாக ஆடிய மார்க்ரம் சதம் விளாசி அசத்தினார். 18வது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடியை நேற்றைய நாள் முடிவில் 56 ஓவர்கள் வீசியும் ஆஸ்திரேலியாவால் பிரிக்க முடியவில்லை. இதனால், ஆட்டமும் நேற்றைய நாள் முடிவில் தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது.
வெறும் 69 ரன்கள்:
தற்போது தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்னும் கைவசம் 2 நாட்கள் உள்ள நிலையில், கையில் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் மிகவும் நிதானமாக ஆடினாலே தென்னாப்பிரிக்கா வெற்றியை எளிதாக பறிக்கலாம். அதேசமயம், ஆஸ்திரேலிய அணியும் ஆபத்தான அணியாகும்.
போட்டி தொடங்கும்போது மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஸ்டார்க் - ஹேசில்வுட் - கம்மின்ஸ் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அவர்களை சமாளித்து ஆடினால் கண்டிப்பாக தென்னாப்பிரிக்கா அசத்தலாம்.
கறைகளை துடைக்குமா தென்னாப்பிரிக்கா?
102 ரன்களுடன் களத்தில் உள்ள மார்க்ரமும், 65 ரன்களுடன் களத்தில் உள்ள கேப்டன் பவுமாவும் இன்று தொடர்ந்து சிறப்பாக ஆடினால் இதுவரை உலக கிரிக்கெட்டில் தங்கள் மீதுள்ள சோக்கர்ஸ் என்ற மிகப்பெரிய கறையை இன்றோடு துடைத்து தென்னாப்பிரிக்கா வீசலாம்.
மேலும், நிறவெறியால் அதிகளவு பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களின் பிரதிநிதியாக காணப்படும் பவுமா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்பதே கோடிக்கணக்கான மக்களின் விருப்பமாக உள்ளது. கோடிக்கணக்கான இதயங்களின் ஆசையை பவுமா நிறைவேற்றுவாரா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.
போட்டிச் சுருக்கம்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் ஸ்மித், வெப்ஸ்டரின் சிறப்பான அரைசதத்தால் 212 ரன்களை எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தங்களைத் தாங்களே தென்னாப்பிரிக்க அணி நெருக்கடியில் தள்ளிக்கொண்டது.
74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியை ரபாடாவும், லுங்கி நிகிடியும் இணைந்து துவம்சம் செய்தனர். இருவரது அபாரமான பந்துவீச்சால் கவாஜா, கிரீன், ஸ்மித், டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ் ஆகியோர் சுருள ஸ்டார்க் மட்டும் 58 ரன்கள் எடுக்க 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. ஆனாலும், 74 ரன்கள் முன்னிலை கிடைத்ததால் 281 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா. இதனால், 282 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவிற்கு நிர்ணயித்தது.