உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து பலமிகுந்த தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. 

Continues below advertisement


ஆதிக்கம் செலுத்திய வேக பந்துவீச்சாளர்கள்:


இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அவரது முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது. மைதானம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரபாடா, ஜான்சென், நிகிடி, முல்டர் ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர். இதனால், 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டானது. 



ரபாடா அபாரமாக பந்துவீசி 15.4 ஓவர்களில் 51 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், மகாராஜ், மார்க்ரம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா தென்னாப்பிரிக்கா?


கேப்டன் பவுமா, பெடிங்கம் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். இதனால், 57.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக பந்து வீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


இதையடுத்து, 2ஆவது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் ஆட வந்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கவாஜா, கிரீன், ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 


சரித்திரம் படைப்பாரா பவுமா?


கடைசியில் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். பொறுமையாக ஆடிய மிட்செல் அரை சதம் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில், 207 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


இதனால், 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. ஆரம்பத்தில், ரிக்கல்டன் விக்கெட்டை இழந்தாலும் அதன் பிறகு பொறுமையாக ஆடி வருகிறது. குறிப்பாக, தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் சிறப்பாக ஆடி வருகிறார். அவருடன் சேர்ந்து கேப்டன் பவுமா பொறுமையாக ஆடி வருகிறார். தற்போது வரை, 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்துள்ளது. இன்னும், 2 நாள்கள் ஆட்டம் மீதமிருக்கும் இருக்கும் நிலையில், இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.