Agni Chopra: அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த லீக் போட்டித் தொடர் தொடங்கியுள்ள நிலையில் இணையத்தில் அதிகமாக பேசப்படும் நபராக மாறியிருப்பவர் அக்னி சோப்ரா. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு சொந்தமாக எம்.ஐ. நியூயார்க் என்ற அணி இந்த தொடரில் ஆடி வருகிறது. இந்த அணிக்காக ஆடத் தேர்வாகி இருப்பவர்தான் இந்த அக்னி சோப்ரா.
மும்பை வாங்கிய பாலிவுட் நட்சத்திரத்தின் வாரிசு:
எத்தனையோ வீரர்கள் இருந்தும் இவர் மட்டும் இணையத்தில் அதிகளவு பேசப்படுவதற்கு காரணம் இவர் பாலிவுட் பிரபலத்தின் வாரிசு ஆவார். இவரது தந்தை பிரபல பாலிவுட் இயக்குனரான விதுவினோத் சோப்ரா. இவரது தாய் பிரபல பாலிவுட் திரை விமர்சகர் அனுபமா சோப்ரா.
யார் இந்த அக்னி சோப்ரா?
1976ம் ஆண்டு முதல் இயக்குனராக திகழ்ந்து வரும் விது வினோத் சோப்ரா ஏராளமான வெற்றிப்படங்களை பாலிவுட்டில் அளித்துள்ளார். முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் படங்களுக்கு ( இந்த படங்களே தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ், நண்பன் என ரீமேக் செய்யப்பட்டது) ஆகிய படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும், அமீர்கானின் பிகே படத்தையும் தயாரித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட 12த் ஃபெயில் படத்தையும் எழுதி இயக்கியவரும் இவரே.
இந்தளவு புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரத்தின் மகன் பெற்றோர்கள் போல பாலிவுட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் கிரிக்கெட்டையே தேர்வு செய்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடிய அக்னி சோப்ராவிற்கு தற்போது மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு கிட்டியுள்ளது. மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் தனது 6 வயது முதலே கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியவர் அக்னி சோப்ரா.
அபாரம்:
சிறு வயது முதலே தான் ஒரு பிரபலத்தின் மகன் என்பதை நண்பர்களுடன் வெளிக்காட்டிக் கொள்ளாமலே கிரிக்கெட் ஆடி வந்துள்ளார் அக்னி சோப்ரா. 2019-20ம் ஆண்டு நவந்த கர்ணல் சிகே நாயுடு டிராபி தொடரில் 23 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணிக்காக ஆடினார். அந்த தொடரில் 800 ரன்களை அக்னி சோப்ரா குவித்தார். அதில் 3 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் அடங்கும். இவரை சிறந்த பேட்ஸ்மேனாக இவரது பயிற்சியாளர் குஷ்ப்ரீத் சிங் ஆலக் உருவாக்கியுள்ளார்.
ஆனாலும், அவருக்கு மும்பை ரஞ்சி அணியில் இடம் கிடைக்கவில்லை. பின்னர், காயம், தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாக அவர் கிரிக்கெட்டையே விட்டுவிட முடிவு செய்துள்ளார். பின்னர், அவருக்கு மிசோரம் அணிக்காக ஆட வாய்ப்பு கிட்டியுள்ளது.
அமெரிக்க குடியுரிமை:
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அக்னி சோப்ரா அந்த தொடரில் 939 ரன்களை குவித்தார். குறிப்பாக, அதில் தான் முதலில் ஆடிய 4 போட்டிகளிலும் சதம் விளாசி அசத்தினார். ஆனால், இவரால் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட முடியாமல் போனதற்கு காரணம் இவரிடம் இருப்பது அமெரிக்க பாஸ்போர்ட் ஆகும். அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் உள்ள டெட்ராய்டில்தான் இவர் பிறந்தார். இவருக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது. இதன் காரணமாகவே இவரால் ரஞ்சியிலும் ஆட இயலவில்லை.
இதன்பின்னரே, கடந்த பிப்ரவரி மாதம் இவர் எம்.ஐ. நியூயார்க் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். 50 ஆயிரம் டாலருக்கு அவர் ஏலத்தில் வாங்கப்பட்டார். அந்த மகிழ்ச்சியான செய்தியே அவருக்கு 17 மணி நேரம் கழித்தே தெரிய வந்துள்ளது. அந்த சமயத்தில் அவர் சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது தாய் குறுஞ்செய்தி மூலமாக இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவர் தொடக்க வீரராக இறங்கி 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இனி வரும் போட்டியில் அசத்துவார் என நம்பப்படுகிறது.