Tim Southee: டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி..
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை, நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை, நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 சிக்சர்களை விளாசியதன் மூலம் அவர் இந்த பெருமையை பெற்றுள்ளார்.
டிம் சவுதி படைத்த சாதனை:
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறி வந்தது. அப்போது 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் சவுதி , அதிரடியாக ஆடி 73 ரன்களை சேர்த்தார். அதில் 6 சிக்சர்கள் அடங்கும். குறிப்பாக இந்த போட்டியில் அவர் 3வது சிக்சரை அடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 78 சிக்சர்கள் உடன் 12வது இடத்தில் இருந்த தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தோனி 144 போட்டிகளில் 78 சிக்சர்கள் அடிக்க, சவுதி 92வது போட்டியிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளார். அதோடு, தற்போது 82 சிக்சர்கள் உடன் பீட்டர்சன், மிஸ்பா-உல்-ஹக் மற்றும் ஹைடன் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் சவுதி 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்திலும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் 2வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சிலும் அசத்தல்:
இதனிடையே, போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் பெருமையை டிம் சவுதி பெற்றார். இதில் 18 முறை அவர் எடுத்த 5-விக்கெட்ஸ் அடங்கும். ஏற்கனவே, சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் சவுதி முதலிடத்தில் உள்ளார்.
ஃபாலோ -ஆன் பெற்ற நியூசிலாந்து:
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் டிம் சவுதி சிறப்பாக செயல்பட்டாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ஃபாலோ அன் பெற்றது. பின்பு, 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
கிரிக்கெட்டில் சவுதி:
34 வயதான டிம் சவுதி கடந்த 2008ம் ஆண்டு அதாவது தனது 19வது வயதில் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை அவர் தொடங்கினார். இதுவரை அவர் விளையாடிய 92 டெஸ்ட் போட்டிகளில் 1,948 ரன்களையும், 154 ஒருநாள் போட்டிகளில் 722 ரன்களையும், 106 டி-போட்டிகளில் 261 ரன்களையும் எடுத்துள்ளார்.