T20 WC, Ind vs Pak: 2019ல் இருந்து வெற்றிநடை போடும் இந்தியா..! பாகிஸ்தானையும் சம்பவம் செய்யுமா...?
இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டித் தொடரில் 2019ம் ஆண்டில் இருந்து இதுவரை தோல்வியை தழுவியதே கிடையாது. நடப்பாண்டில் இலங்கைக்கு எதிராக கொரோனா பாதிப்பால் தொடரை இழந்தது.
உலகக்கோப்பை டி20 போட்டித்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் சம பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது. இந்திய அணி கடந்த 2019ம் ஆண்டில் இருந்து, இலங்கைக்கு எதிராக நடப்பாண்டில் நடைபெற்ற தொடர் தவிர பிற எந்த தொடரையும் இதுவரை இழந்ததில்லை. 2018-19ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 0-2 என்று டி20 தொடரை இழந்த பிறகு இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடங்கியது.
அமெரிக்காவிலும், மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர், இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்காளதேச அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பயணத்தை தொடர்ந்தது.
பின்னர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வெற்றிநடையை தொடர்ந்தது. அடுத்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை விளையாடிய 3 டி20 போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் வென்று டி20யில் தனது ஆதிக்கத்தை இந்தியா தொடர்ந்தது.
உள்நாட்டில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்திய அணி, வெளிநாட்டு மண்ணிலும் தாங்கள்தான் ஜாம்பவான் என்று நிரூபித்தது. நியூசிலாந்து சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று ஆச்சரியப்படுத்தியது. நியூசிலாந்தை வீழ்த்திய கையோடு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அங்கும் தனது வெற்றியை கோலோச்சியது. அங்கு நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய கண்டத்தில் ராஜாங்கம் செய்து திரும்பியது.
பின்னர், இந்தியா திரும்பிய பிறகு இங்கிலாந்துடன் டி20 தொடரில் மோதியது. இரு அணிகளும் மோதிய 5 டி20 போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து 6வது முறையாக தொடரை வென்று சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 8 முறையாக எந்த தொடரையும் இழக்காமல் வீறுநடை போட்டது.
இதையடுத்து, நடப்பாண்டில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் அடுத்த போட்டிகளுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், அதற்கடுத்த போட்டிகளில் எந்த அனுபவமும் இல்லாத வீரர்கள் களமிறங்கினர். இதன்காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தால் நிச்சயம் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கும் என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்