Shane Warne:ஸ்பின் கிங்.. ஷேன் வார்ன் பிறந்தநாள்! அவர் செய்த சாதனைகள் என்ன?
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் பிறந்த தினம் இன்று.
ஷேன் வார்ன் பிறந்த நாள்:
எத்தனையோ போட்டிகள் எத்தனையோ பந்துகள், எத்தனையோ விக்கெட்டுகளை மறக்க முடியுமா? மிகப்பெரிய கிரிக்கெட் மூளைக்காரர் என்றால் அது ஷேன் வார்ன் தான். கிரிக்கெட் உலகமே தலையில் வைத்து கொண்டாடிய மாவீரன் ஷேன் வார்னுக்கு இன்று(செப்டம்பர் 13) 55வது பிறந்த நாள். இச்சூழலில் அவர் கிரிக்கெட்டில் செய்த சாதனைகளின் சிறிய தொகுப்ப்பை இங்கே பார்ப்போம்:
708 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கு சொந்தக்காரர்:
708 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளில் முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் சேர்த்து 1000 சர்வதேச விக்கெட்டுகளைக்கைப்பற்றியவர்களில் முரளிதரன், ஷேன் வார்ன் இருவரும் உள்ளனர். ஷேன் வார்ன் 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 37 முறை எடுத்துள்ளார் ஷேன் வார்ன், இதிலும் 2ம் இடம். 2005-ல் ஒரே ஆண்டில் 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றி காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த பவுலர் ஆனார்.
பேட்டிங்கில் சர்வதேசப் போட்டிகளில் 13 அரைசதங்களை அடித்தவர் ஷேன் வார்ன். ஷேன் வார்ன் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 2008 முதல் 2011 வரை நான்கு சீசன்களில் பங்கேற்றார். ஐபிஎல்லில் இவர் விளையாடிய ஒரே அணி ராஜஸ்தான். 55 போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 7.27 எக்கனாமியுடன் வார்னின் ஆல்-டைம் போட்டி சராசரி 25.39 ஆக உள்ளது. அவர் ஃபிரான்சைஸ் போட்டியின் நான்கு சீசன்களிலும் 198 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2008 தொடரில் தன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சாம்பியன ஆக்கினார். 1993-ல் மைக் கேட்டிங்கிற்கு பிட்சிற்கு வெளியே குத்தி மைக் கேட்டிங் ஆஃப் ஸ்டம்பை தெறிக்கவிட்ட பந்து இன்று வரை ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது. உலக அணிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஷேன் வார்ன் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1999 உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெற்றியை நோக்கி சவுகரியமாகப் பிரயாணித்துக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியை தன் பவுலிங்கின் மூலம் சிதைத்து ஆஸ்திரேலியாவை இறுதிக்கு இட்டுச் சென்றவர், இந்த உலகக்கோப்பையில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.